குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம்: சமூக செயற்பாட்டாளர்கள் ரவி, ஏக்தா சேகர் உள்ளிட்ட 57 பேருக்கு ஜாமீன்

வாரணாசி: குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடி கைதான பனாரஸ் இந்து பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட 57 பேர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

மத்திய அரசு கொண்டு  வந்த குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக, உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் கடந்த மாதம் 19ம் தேதி  போராட்டம் நடந்தது.

அப்போது பனாரஸ் பல்கலைக்கழக மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட 59 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் சமூக செயற்பாட்டாளர்கள் ஏக்தா, ரவிசேகர் தம்பதியினரும் அடக்கம்.

இருவரும் கைது செய்யப்பட்டதால் அவர்களின் 14 மாத குழந்தை தவித்தது. இதையறிந்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் ப்ரியங்கா காந்தி நடந்த சம்பவத்தை கடுமையாக கண்டித்தார்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களில் 57 பேருக்கு கூடுதல் அமர்வு நீதிபதி எஸ்.கே. பாண்டே ஜாமீன் வழங்கினார். சமூக செயற்பாட்டாளர்கள் ஏக்தா, ரவிசேகர் தம்பதியினருக்கும் ஜாமீன் கிடைத்தது. 25 ஆயிரம் ரூபாய் பிணைத் தொகையுடன் அனைவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது.

You may have missed