வறட்சி நிவாரணம் உள்பட பல்வேறு கோரிக்கைகள்: டில்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

டில்லி :

றட்சி நிவாரணம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் தலைநகர் டில்லியில் 2 நாட்கள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

இந்த போராட்டத்தில் கலந்துகொள்ள டில்லி சென்றுள்ள தமிழக விவசாயிகள் இன்று மத்திய அரசை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.

அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புகுழு என்ற 207 அமைப்புகள் இணைந்த விவசாய அமைப்பு   வறட்சி நிவாரணம், பயிர்களுக்கு குறைந்தபட்ச  விலை நிர்ணயம், பயிர் பாதுகாப்பு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2 நாட்கள் போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தது.

டில்லியில் விவசாயிகள் போராட்டம்

அதன்படி தலைநகர் டில்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் இன்றும், நாளையும் போராட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள நாடு முழுவதிலும் இருந்து  விவசாயிகள் திரண்டு டில்லி வந்துள்ளனர். தமிழக விவசாயிகளும் போராட்டத்தில் பங்கேற்க டில்லி சென்றுள்ளனர்.

நேற்று சென்னையில் இருந்து ரயிலில் புறப்பட்ட அவர்கள், டில்லி ரயில் நிலையம் சென்றடைந்ததும்,  கோஷங் களை எழுப்பியவாறு ராமலீலா மைதானத்துக்கு அரைநிர்வாண கோலத்தில் ஊர்வலமாக சென்றனர்.இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுபோல  நாடு முழுவதிலும் இருந்து போராட்டத்தில் கலந்துகொள்ள வருகை தரும் விவசாயிகள் ராமலீலா மைதானத்துக்கு ஊர்வலமாக செல்கிறார்கள்.  நாளை ராம்லீலா மைதானத்தில் இருந்து அனைத்து விவசாயிகளும் ஒன்றிணைந்து நாடாளுமன்றத்தை நோக்கி ஊர்வலமாக செல்கிறார்கள்.

தலைநகரில் விவசாயிகள் குவிந்து வருவது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. காவல்துறையினரும் குவிக்கப்பட்டு உள்ளனர்.