கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் நேற்றிரவு 11.30 மணி வரை 236 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நான்கு பேர் பலியாகி உள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 191 பேர் இந்தியர்கள், 32 பேர் வெளிநாட்டவர்கள். 23 பேர் குணமடைந்துள்ளனர் என்கிறது இந்திய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை.

மக்கள் தொகை அதிகம் உள்ள மற்ற நாடுகளை ஒப்பிடும் போது இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் குறைவாகவே உள்ளதாக ஒரு கருத்து நிலவுகிறது.

நாட்டு மக்கள் அனைவருமே மார்ச் 22-ம் தேதி சுய ஊரடங்கைக் கடைப்பிடிக்கப் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்

இதனிடையே மக்கள் ஊரடங்கு அன்று ஓவியப் போட்டி ஒன்றை அறிவித்துள்ளார் இயக்குநர் வசந்தபாலன்.

இது தொடர்பாகத் தனது ஃபேஸ்புக் பதிவில் :-

12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஒரு ஓவியப் போட்டியை அறிவிக்கலாம் என்று தோன்றியது. வீட்டிலிருந்தபடியே A4 வெள்ளை பேப்பரில் வண்ணப் பென்சில் அல்லது சாதாரண பென்சிலில் வரைந்து அலைபேசியில் புகைப்படம் எடுத்து என் மின்னஞ்சல் முகவரிக்கு (vasantabalan@gmail.com) அனுப்பி வைக்கலாம்.

காலக்கெடு: 22-ம்தேதி காலை 10 மணி முதல் 23-ம் தேதி காலை 10 மணி வரை வரும் மெயில்கள் மட்டுமே போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படும். ஓவியங்கள் அனுப்பும் குழந்தைகளின் புகைப்படம், படிக்கும் வகுப்பு, பள்ளியின் விவரம் இணைக்கப்படுதல் அவசியம். பெற்றோர்கள் வரைந்து தருவதைத் தவிர்க்க வேண்டும்.

முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு என்று மூன்று பரிசுகள் உண்டு. ஒருவரே எத்தனை படங்கள் வேண்டுமானாலும் வரைந்து அனுப்பி வைக்கலாம்.

தலைப்பு : கொரோனாவை வெல்வோம்”.என வசந்தபாலன் தெரிவித்துள்ளார்.