‘கருத்துக்களை பதிவுசெய்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கே . பாக்யராஜ் பேசும்போது : ஒரு பெண்ணுக்குத் தந்தை பாதுகாப்பிற்காகத்தான் போன் வாங்கிக் கொடுக்கிறார். ஆனால் பெண்கள் அதைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள். அதை இந்தப் படத்தில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

ஆண்களை மட்டுமே குறை சொல்வதில் அர்த்தம் இல்லை. பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு செல்போன் வந்ததும் போய்விட்டது.

பாலியல் பிரச்சினைக்குப் பெண்கள் தான் மூலகாரணம். ஆண்கள் சின்ன வீடு வைத்திருந்தாலும், மனைவியைத் தொந்தரவு செய்வதில்லை. ஆனால், வேறொரு ஆணுடன் இருக்கும் பெண்கள் குழந்தையையும், கணவரையும் கொலை செய்யும் அளவுக்குத் துணிகிறார்கள். பெண்களுக்கு எப்போதும் சுய கட்டுப்பாடு வேண்டும் என்று சொல்வார்கள்.

இந்த செல்போன் வந்ததால் தான் பெண்கள் கட்டுப்பாட்டைத் தாண்டி எங்கேயோ சென்று கொண்டிருக்கிறார்கள். பொள்ளாச்சியில் நடந்த தவறுக்கு ஆண்கள் மட்டுமே காரணம் என்று சொல்லிவிட முடியாது. பெண்ணின் பலவீனத்தை அவன் உபயோகப்படுத்திக் கொண்டான். அவன் செய்தது தவறு என்றால், அந்த வாய்ப்பை உண்டாக்கிக் கொடுத்ததும் தவறு தான்” என்று பேசினார் இயக்குநர் பாக்யராஜ்.

இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையாக உருவாகியுள்ளது. இதற்கு பல்வேறு பெண்கள் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தமிழக மகளிர் ஆணையத்துக்கு ஆந்திரப் பிரதேச மகளிர் ஆணையம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில், “தமிழகத்தில் பிரபல நடிகரான பாக்யராஜ், இந்தியப் பெண்களை மொத்தமாக இழிவுபடுத்தும் விதமாகக் கூறிய கருத்தை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன்.

தேசிய பெண்கள் ஆணையம், மற்ற மாநில ஆணையங்களும் இந்த சமூகத்தில் நல்ல மாற்றத்தைக் கொண்டு வரவும், பெண்கள் உரிமைக்காகவும் முயற்சித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் இது பற்றி எதுவும் தெரியாமல் ஒன்றிரண்டு உதாரணங்களை மட்டும் வைத்து பொதுவாக ஒரு கருத்தை பாக்யராஜ் கூறியுள்ளார்.

இது பெண்களுக்காகச் செயல்படும் ஆர்வலர்கள், அமைப்புகள், ஆணையங்கள் மற்றும் அரசின் முயற்சிகளைக் காயப்படுத்தும் விதமாக இருக்கிறது. எனவே, இந்த விஷயத்தை அரசு மற்றும் சட்டரீதியாகக் கொண்டு சென்று, பாக்யராஜுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக மகளிர் ஆணையத்தின் தலைவரிடம் கேட்டுக்கொள்கிறேன். நன்றி. உங்கள் பதிலுக்காகக் காத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளது ஆந்திரப் பிரதேச மகளிர் ஆணையம்.