வசுந்தர ராஜேவின் கௌரவ யாத்திரை பாஜகவின் விடைபெறும் யாத்திரை : காங்கிரஸ்

ஜெய்ப்பூர்

ராஜஸ்தான் முதல்வர் நடத்த உள்ள 58 தின கௌரவ யாத்திரை பாஜகவின் விடைபெறும் யாத்திரை ஆகும் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மூலை முடுக்குகளில் எல்லாம் சுற்றுப் பயணம் செய்து அரசின் சாதனைகளை விளக்க முதல்வர் வசுந்தர ராஜே முடிவு செய்துள்ளார்.   இந்த சுற்றுப் பயணத்துக்கு கௌரவ யாத்திரை என பெயர் சூட்டப்பட்டுள்ளது.    இந்த பயணத்துக்கு மாநில அரசு உதவிகள் புரிவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

இந்த யாத்திரையை பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தொடங்க உள்ளார்.   இந்த பயணத்துக்கு ராஜஸ்தானில் உள்ள மேவார் பகுதியில் வரவேற்பு இருக்காது என அஞ்சப்படுவதால் வெளி இடங்களில் இருந்து மக்கள் அழைத்து வரப்பட்டுளனர்.   ராஜSதான் அரசின் முதல்வர்களை தீர்மானிப்பதில் மேவார் பெரும் பங்கு வகிக்கிறது.    ராஜஸ்தான் அரசு நாளை முடிவு செய்வதை மேவார் இன்று தீர்மானிக்கும் என ராஜஸ்தானில் சொல்லப்படுகிறது.

கடந்த 5 வருடங்களாக இந்த பகுதியில் முன்னேற்றம் ஏதும் நடைபெறவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.  இது குறித்து ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் முதல்வருமான அசோக் கெகலாத், “இந்தப் பயணம் ராஜஸ்தான் மக்களை ஏமாற்ற அரசு செலவில் பாஜக நடத்தும் தேர்தல் பிரசார பயணம் ஆகும்.   குறிப்பாக மேவார் மக்கள் அரசின் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.  அதை போக்கவே அரசு இந்த பயணத்தை ஏற்பாடு செய்துள்ளது.

இந்து மக்களின் மனதைக் கவர இந்த பயணத்தில் அனைத்து இந்து மத தலங்களுக்கும் முதல்வர் செல்கிறார்.    ஆனால் மாநிலத்தில் உள்ள இந்து மக்களுக்கும் இந்த பாஜக அரசின் நடவடிக்கைகள் திருப்தியை உண்டாக்கவில்லை.    இந்த பயணம் என்பது வெறும் கண் துடைப்பு நடவடிக்கை என்பதை மக்கள் அறிந்துளனர்.   அநேகமாக இந்த கௌரவ யாத்திரை என்பது பாஜக அரசின் விடைபெறும் யாத்திரையாக அமையக்கூடும்” என தெரிவித்துள்ளார்.