பீஜிங்

சீன நாட்டு தேவாலயங்களில் பிஷப்புகள் நியமனம் குறித்து சீனா – வாடிகன் இடையே பேச்சு வார்த்தை நடைபெறுவது தைவானில் பதட்டத்தை உண்டாக்கி உள்ளது.

சீனாவில் உள்ள தேவாலயங்கள் இரு பிரிவாக பிரிந்துள்ளன.    ஒரு பிரிவு வாடிகன் போப் ஆண்டவரின் கட்டுப்பாட்டிலும் மற்றது சீன அரசின் கட்டுப்பாட்டிலும் உள்ளன.    அந்தந்த தேவாலயங்களின் தலைமை போதகர் எனப்படும் பிஷப் நியமனத்தை வாடிகன் தலைமையகமும் அரசும் தீர்மானிக்கின்றன.   இந்நிலையில் மத விவகாரங்களில் அரசு தலையிடுவதாக ஒரு புகார் எழுந்தது.

அதை முடிவுக்கு கொண்டு வர சீன அரசு வாடிகன் பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.    இதன் மூலம் சீனாவில் உள்ள 1.2 கோடி கத்தோலிக்க கிறித்துவர்களின் வேண்டுகோள் நிறைவேற்றப் பட்டு அனைத்து தேவாலயங்களையும் வாடிகன் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர முயற்சிகள் ஏற்பட உள்ளன.    மேலும் இதன் மூலம் சீன அரசுக்கும் வாடிகனுக்கும் இடையே நல்லுறவு மலரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பேச்சு வார்த்தை சீன நாட்டு மக்களிடையே மகிழ்வை கொடுத்த போதிலும் தைவானில் பதட்டத்தை உண்டாக்கி உள்ளது.   தைவான் சீனாவில் இருந்து பிரிந்து தன்னை தனி நாடு என அறிவித்து ஆட்சி செய்து வருகிறது.    அதை இன்று வரை சீனா ஒப்புக் கொள்ளாமல் தைவான் சீன நாட்டின் ஒரு பகுதி எனவே கூறி வருகிறது.   இந்தப் பிரிவினையை பல நாடுகள் இன்னும் அங்கீகரிக்கவில்லை.

அவ்வாறு அங்கீகரிக்காத நாடுகளின் வாடிகனும் ஒன்றாகும்.   தற்போது சீனா வாடிகன் இடையே நல்லுறவு மலரும் சூழல் ஏற்பட்டுள்ளதால் சீனாவுக்கு எதிராக எந்த ஒரு முடிவையும் வாடிகன் எடுக்காது என தெரிய வந்துள்ளது.   அதையொட்டி தைவானை தனி நாடாக வாடிகன் அங்கீகரிக்காது என்னும் ஐயம் எழுந்துள்ளது.   அதனால் வாடிகன் தைவானை அங்கீகரிக்காவிடில் தைவானில் உள்ள கத்தோலிக்க கிறித்துவர்களும் தைவான் பிரிவதை அங்கீகரிக்க முடியாத நிலை உண்டாகும்.

ஆனால் தைவானில் உள்ள கத்தோலிக்க தலைவர்கள் அவ்வாறு நடக்காது என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.   தைவானை சேர்ந்த கத்தோலிக்க தலைவர் ஜான் ஹங், “வாடிகனும் சீன அரசும் நிச்சயம் எந்த விதத்திலும் சேராது.    கம்யூனிஸ்ட் தத்துவங்கள் வாடிகனுக்கு எதிரானவை.   அதனால் நல்லுறவு கொள்ள வாய்ப்பே இல்லை.  சுதந்திரத்தை விரும்பும் வாடிகன் நிச்சயம் சீனாவுடன் உறவை ஏற்படுத்திக் கொள்ளாது” என தெரிவித்துள்ளார்.