பாரீஸ்: நம்பிக்கையாளர்கள் யாருமின்றி வாடிகனில் நடைபெற்ற ஈஸ்டர் பிரார்த்தனை, வழக்கத்தை மீறி, உலகெங்கும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இதற்கான அனுமதியை போப் ஃபிரான்சிஸ் வழங்கினார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் முடங்கியுள்ளது. உலக பலி எண்ணிக்கை ஒரு லட்சத்து பத்தாயிரத்தை நெருங்கி வருகிறது. இந்த நிலையில், கிறிஸ்தவர்களின் பண்டிகையான புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் பண்டிகைகளை அம்மதத்தவர்கள் வீட்டிலிருந்தபடியே கொண்டாடி வருகின்றனர்.

கிறிஸ்தவர்களின் புனித நகரான வாடிகனும், அதனைச் சுற்றியுள்ள இத்தாலியிலும் மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. வாடிகன் நகரை மூடி சீல் வைத்துள்ளனர். கொரோனாவால் 19 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இத்தாலியில் மட்டும் உயிரிழந்துள்ளனர்.

புனித வெள்ளி பிரார்த்தனைகளின்போது, சுகாதார பணியாளர்களை கவுரவிக்கும் விதமாக, ஐந்து மருத்துவர்கள், செவிலியர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.

ஈஸ்டர் பிரார்த்தனை 50 ஆண்டுகளாக, பல ஆயிரம் பேர் பங்கேற்க நடந்து வந்தது. இன்று பொது மக்கள் ஒருவரும் இன்றி நடைபெற்றது. கிறித்தவர்கள் அனைவரும் வீட்டிலிருந்தே காணும் வகையில், அதனை நேரடி ஒளிபரப்பு செய்தனர்.

போப் வெளியிட்ட ஈஸ்டர் வாழ்த்து செய்தியில், “பயப்பட வேண்டாம். பயத்திற்கு அடிபணியாதீர்கள். இது நம்பிக்கையின் செய்தி. மரணத்தின் அழுகையை மவுனமாக்குவோம். இனிமேலும் போர்கள் தேவையில்லை. ஆயுத உற்பத்தியையும் வர்த்தகத்தையும் நிறுத்துங்கள். நமக்கு தேவை ரொட்டிகள் தான். துப்பாக்கிகள் இல்லை”. என்றார்.