வாடிகன்

வாடிகன் உள்ளிட்ட பல திருத்தலங்களில் கொரோனா அச்சுறுத்தலால் மக்கள் வருவது  அடியோடு நின்றுள்ளது.

சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் தொற்று அந்நாட்டை மட்டுமின்றி பல உலக நாடுகளிலும் பரவி அச்சுறுத்தி வருகிறது.  உலக சுகாதார மையம் சுகாதார அவசர நிலை அறிவித்துள்ளது.   அத்துடன் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கு பல எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.  உலக மக்கள் அனைவரும் பீதியில் ஆழ்ந்துள்ளனர்

அனைத்து மத திருத்தலங்களிலும் ஒவ்வொரு பருவம் சிறப்பு மாதமாகும்.  குறிப்பாக அம்மன் கோவிலில்  ஆடி மாதம், அல்லாவின் மெக்காவில் ரம்ஜான் மாதம்,  ஐயப்பன் கோவிலில் கார்த்திகை மாதம் எனக் கூட்டம் நிரம்பி வழியும்.  அதே வேளையில் துன்பம் நேர்கையில் கடவுளின் திருத்தலங்களில் பருவ வித்தியாசம் இன்றி மக்கள் கூட்டம் அலை மோதுவது வழக்கமாகும்.

கத்தோலிக்க மதத்தவரின் திருத்தலமான வாடிகன் நகரில் தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடுவது வழக்கமாகும்.   இங்குள்ள செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் அனைவரும் கூடி பிரார்த்தனை செய்வது வழக்கமாகும்.  மார்ச் மாதம் புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் நெருங்கி வருவதால் லட்சக் கணக்கானோர் வருவார்கள்,

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மக்கள் அதிகம் கூட்டம் கூட வேண்டாம் எனவும் கூட்டத்தில் கொரோனா தொற்று அதிகரிக்கும் எனவும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.   ஆகவே தற்போது வாடிகன் நகரம் வெறிச்சோடி காணப்படுகிறது.  கூட்டமில்லாமல் வாடிகன் இருப்பது அதிசயமாக சொல்லப்படுகிறது.

அனைத்து துயரத்தையும் போக்க ஆண்டவனைக் கும்பிடும் பக்தர்களையும்  கொரோனா வைரஸ் அச்சுறுத்துவதால் கொரோனா கடவுளை விட வலிமை பெற்றுள்ளதாக நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.