கர்நாடகாவில் ‘வாட்டாளின்’ முழு அடைப்பு போராட்டம் பிசுபிசுத்தது!

பெங்களூர்,

றட்சி காரணமாக கர்நாடகாவில் உள்ள விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய வேண்டும், மேகதாது அணையை உடனே கட்ட வேண்டும் என்று அரசை வலியுறுத்தி  என்று கன்னட சாலுவாளி கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் இன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

ஆனால், அங்குள்ள மக்களின் ஆதரவின்றி போராட்டம் பிசுபிசுத்துள்ளது.

காவிரியில் மேகதாது அணையை உடனே கட்ட வேண்டும் என்றும், விவசாயிகள் கடன்களை ரத்து செய்ய வேண்டம் என்றும் கர்நாடக ஜாதிய அமைப்புகள் இன்று முழு அடைப்பு நடத்தி வருகின்றன.

இன்றைய போராட்டத்துக்கு எந்தவொரு அரசியல் கட்சியும் பகிரங்கமாக ஆதரவு கொடுக்க வில்லை. மேலும் அடிக்கடி முழு அடைப்பு நடத்த வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு விடுப்பதால், அவரது அறிவிப்புக்கு மக்களிடையேயும் ஆதரவு இல்லை. இதன் காரணமாக கர்நாடகாவில் இன்று பள்ளி, கல்லூரிகள், பேருந்துகள், அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் இயங்கி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

தமிழகத்தில் இருந்து கர்நாடகா செல்லும்  பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்பட்டன. கன்னட அமைப்புகள் நடத்தும் இந்த போராட்டம் தீவிரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட சாம்ராஜ் நகர், கோலார் ,மைசூர் ஆகிய மாவட்டங்களில் கடைகள் திறக்கப்பட்டு மக்கள் நடமாட்டம் சகஜ மாகவே இருப்பதாக கூறப்படுகிறது.

போலீசார் முக்கியமான இடங்களில் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். தமிழர்கள் வாழும் பகுதிகளிலும் போலீசார் ரோந்து வருகின்றனர்.

மக்கள் சகஜ வாழ்க்கை காரணமாக வாட்டாள் நாகராஜ் அறிவித்த முழு அடைப்பு  போராட்டம் தோல்வியடைந்து பிசுபிசுத்துபோனது.