வாழப்பாடி.ஏப்.11 :

சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தெருநாய்களுக்கு உணவளித்து வருகிறார். இவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

வாழப்பாடி பேரூராட்சி காமராஜ் நகர் ஆத்துமேடு பகுதியைச் சேர்ந்தவர் தேவேந்திரன்.(29). நாய்கள் மீது பற்று கொண்ட இவர், கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு இன நாய்களை வளர்த்து பயிற்சி அளித்து வருகிறார். நாய்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக பல்வேறு சிறப்பு பயிற்சிகளையும் பெற்றுள்ளார்.

விலங்குகள் நல ஆர்வலர் : தேவேந்திரன்

கொரானா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால், தெருவோர சிற்றுண்டிகள், உணகவங்கள், இறைச்சி கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் தெருநாய்களுக்கு போதிய உணவு கிடைக்காமல் தவித்து வருகின்றன.

இதனையறிந்த இளைஞர் தேவேந்திரன், தனது சொந்த செலவில் உணவு தயாரித்து, தனது இருசக்கர வாகனத்தில் எடுத்துச்சென்று தெருநாய்களுக்கு உணவளித்து வருகிறார். உணவின்றி தவித்து வரும் தெரு நாய்களுக்கு உணவளித்து வரும் இந்த இளைஞரின் செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தேவேந்திரனிடம் கேட்டதற்கு, நாய்கள் வளர்ப்பில் ஆர்வம் ஏற்பட்டதால், நாய்களை வளர்க்கவும் பராமரித்து பயிற்சி அளிக்கவும் பயிற்சி பெற்றேன். தற்போது நாய்களுக்கு பயிற்சி அளிக்கும் பணியை செய்து வருகிறேன். ஊரடங்கு நேரத்தில் உணவின்றி தவித்த தெருநாய்களுக்கு உணவளிப்பதில் மனநிறைவு கிடைத்துள்ளது என்றார்.