டலூர் மாவட்டத்தில் அப்பாவி இளைஞரை ஒருவரை விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் உயிரோடு எரித்து கொன்றுவிட்டனர் என்று  பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டி இருக்கிறார்.

இது குறித்து க அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

“ சாத்தாவட்டம் கிராமத்தைச் சேர்ந்த அரிகிருஷ்ணன் என்பவரின் மகன் ஆனந்தன் ஐ.டி.ஐ படித்து விட்டு வேலைக்காக வெளிநாடு செல்லும் முயற்சியில் ஈடுபட்டு வந்திருக்கிறார். நேற்று முன்தினம் மாலை  சாத்தாவட்டம் பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்த போது விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த சிலர், ஆனந்தனை வழிமறித்து அவரது கைகளையும், கால்களையும் பிடித்துக் கொண்டு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டு எரித்துள்ளனர்.

தீயின் கொடுமை தாங்க முடியாமல் ஆனந்தன் சத்தமிட்டதை கேட்ட அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் ஓடிவந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை  விரட்டி அடித்து விட்டு, ஆனந்தனை மீட்டனர். உடல் முழுவதும் 90% தீக்காயங்களுடன் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஆனந்தன் மருத்துவம் பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

ஆனந்தனை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்  எரித்துக் கொன்றதை சாதாரணமான நிகழ்வாகக் கருதி ஒதுக்கிவிட முடியாது. சாத்தாவட்டம் கிராமத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களும், தாழ்த்தப்பட்ட மக்களும் வாழ்ந்து வருகின்றனர். அவர்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் பல சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனந்தன் தான் அவரது குடும்பத்தின் நம்பிக்கையாக இருந்திருக்கிறார். பெற்றோரைக் காப்பாற்றவும், தங்கையின் திருமணத்திற்காகவும் அவர் வெளிநாடு செல்லவிருந்த நிலையில் தான் அவர் கொல்லப் பட்டிருக்கிறார். அவரைக் கொலை செய்த குற்றவாளிகள் மட்டுமின்றி பின்னணியில் இருந்து இயக்கிய விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரையும் காவல்துறை கைது செய்து தண்டனை பெற்றுத்தர வேண்டும். ஆனந்தன் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். இரு நாட்களில் இதைச் செய்யத் தவறினால் மிகப்பெரிய போராட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும்” என்று  டாக்டர் ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.