திருப்பதி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் போட்டி…

 

ஆந்திர மாநிலம் திருப்பதி தொகுதியில் ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி.யாக இருந்த துர்கா பிரசாத ராவ், கடந்த செப்டம்பர் மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தார்.

காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த தொகுதியில் எப்போது தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்படவில்லை.

எனினும் இந்த தொகுதியில் தெலுங்கு தேசம் வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் பனபாக லட்சுமி போட்டியிடுவார் என அந்த கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.

காங்கிரஸ் சார்பில் முன்னாள் அமைச்சர் சிந்தா மோகன் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. அவர் இந்த தொகுதியில் 6 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

பா.ஜ.க மற்றும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர்களும் இங்கு களம் இறங்குவது உறுதி.

இந்த நிலையில் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் “திருப்பதி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் தங்கள் கட்சி போட்டியிடும்” என தெரிவித்தார்.

“இது குறித்து ஒத்த கருத்துடைய கட்சிகள் மற்றும் தலித் அமைப்புகளுடன் கலந்து ஆலோசிக்க உள்ளேன்” என அவர் மேலும் கூறினார்.

திருப்பதி தொகுதி ரிசர்வ் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

– பா. பாரதி