ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழகஅரசிடம் வேதாந்தா நிறுவனம் மனு

சென்னை:

சீல் வைக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி வேதாந்தா நிறுவனம் சார்பில் தமிழக அரசு மற்றும் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு கடிதம் எழுதி உள்ளது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் 13 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.

இதை எதிர்த்து, வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கில், தேசிய பசுமை தீர்ப்பாயம் நிபந்தனைகளுடன் ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதி வழங்கியது.

இதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவும் தள்ளுபடியான நிலையில், வேதாந்தா நிறுவனம் தமிழக அரசு மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு ஆலையின் சீலை அகற்றும்படி கடிதம் எழுதி உள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்த உத்தரவுக்கு தடைகோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், உச்சநீதிமன்றம் தடை விதிக்க மறுத்துவிட்டது.

இந்நிலையில் ஆலையை உடனடியாக திறக்க ஏதுவாக சீலை அகற்றி, ஆலை செயல்படத் தேவையான அனுமதி வழங்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம், தமிழக தலைமை செயலாளர் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு கடிதம் எழுதியிருந்தது.

அதுபோலவே  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு அந்நிறுவனம் எழுதிய கடிதத் தில், தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவுறுத்தியுள்ள 25 நிபந்தனைகளை செயல் படுத்த ஏதுவாக ஆலையின் சீலை அகற்றி, தேவையான அனுமதி தர கோரி உள்ளது.

இதன் காரணமாக தூத்துக்குடி பகுதியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.