டில்லி:

பொதுமக்கள் போராட்டம் காரணமாக கடந்த மாதம் ஸ்டெர்லைட் ஆலை இயங்க தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளிக்க மறுத்தது. இதற்கிடையில், தற்போது நடைபெற்ற துப்பாக்கி சூடு மற்றும் வன்முறை காரணமாக, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவின் பேரில் ஸ்டெர்லைட்  ஆலைக்கு வழங்கப்பட்டு வந்த மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்கள் போராட்டம் வன்முறையாக மாறி 13 பேரை காவு வாங்கியது. இதன் காரணமாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் ஆங்காங்கே ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போரட்டத்தில் குதித்தனர். லண்டனில் உள்ள வேதாந்தா நிறுவன தலைவர்  அனில் அகர்வால் வீடு முன்பும் போராட்டம் நடைபெற்றது.

இதன் காரணமாக  வேதாந்தா நிறுவனத்தின் பங்குகள்,  பங்கு சந்தையில் தொடர் வீழ்ச்சியை கண்டன.  இந்த நிலையில், ஸ்டெர்லைட் நிறுவனமான வேதாந்த குழும நிறுவனத்தில் இருந்து சேர் மார்க்கெட்டை நிர்வகித்து வரும் செபிக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

அதில், தமிழக அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி மறுப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் 27ந்தேதி முதல், தூத்துக்குடி இயங்கி வந்த ஸ்டெர்லைட் தாமிர ஆலை யூனிட்-1 நிறுத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளது.

வேதாந்த நிறுவனத்தின் செகரட்டரி பூமிகா சூட் இந்த கடிதத்தை அனுப்பி உள்ளார்.

இதற்கிடையில்,   ஸ்டெர்லைட் ஆலையின் உரிமையாளர் அனில் அகர்வால் தனது டிவிட்டர் பக்கத்தில் நேற்று ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார்,

அதில்,   தூத்துக்குடியில் போராட்டத்தின் போது நடந்தது துரதிர்ஷ்டவசமான சம்பவம். அந்த சம்பவத்தால் நான் மிகவும் வேதனையில் உள்ளேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை தற்காலிகமாக மூடுவதாகவும்,  நீதிமன்ற அனுமதி பெற்று ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்குவோம் என்றும், அரசு, நீதிமன்றங்களின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு தான் ஸ்டெர்லைட் ஆலை இயங்கியது. அரசு மற்றும் நீதிமன்றத்தின் உத்தரவுகளை கடுமையாக பின்பற்றி வருகிறோம் என்று கூறி உள்ளது குறிப்பிடத்தக்கது.