வேதாந்தா குழுமம் லண்டன் பங்குவர்த்தக சந்தையில் இருந்து நீக்கம்

ண்டன்

ஸ்டெர்லைட் ஆலையின் உரிமையாளரான வேதாந்தா குழுமம் லண்டன் பங்கு வர்த்தக சந்தையில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

லண்டனை சேர்ந்த இந்தியரான அனில் அகர்வால் நடத்தி வரும் நிறுவனம் வேதாந்தா குழுமம் ஆகும்.    தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் தாமிர ஆலை இந்த குழுமத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.   இந்த ஆலையினால் சுற்றுச் சூழல் மாசு படுவதாக எழுந்த புகாரை ஒட்டி ஆலையை மூடக் கோரி மக்கள் போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்து காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 14 பேர் மரணம் அடைந்தனர்.   அதன் பிறகு தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டது.   இந்த நிகழ்வுகள் லண்டன் பங்கு வர்த்தக சந்தையில் பாதிப்பை உண்டாக்கின.   இங்கிலாந்து நாட்டின் தொழிலாளர் கட்சி இந்த நிறுவனத்தை பங்குச் சந்தையில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் என தெரிவித்தது.

அதைத் தொடர்ந்து வேதாந்தா குழுமத்தின் பங்குகளை வாங்கிக் கொள்ள அதன் உரிமையாளர் நடத்தும் வோல்கன் டிரஸ்ட் ஒப்புக் கொண்டுள்ளது. தற்போது வேதாந்த குழுமத்தின் பங்குகள் $8.25 என்னும் விலையில் உள்ளன.   அந்த பணத்தைக் கொடுத்து பங்குகளை வோல்கன் டிரஸ்ட் வாங்க உள்ளது.   ஏற்கனவே வோல்கன் டிரஸ்டிடம் இந்த குழுமத்தின் 66.53% பங்குகள் உள்ளன.

இவ்வாறு பங்குகளை வோல்கன் வாங்குவதால் அந்த டிரஸ்ட் இந்த நிறுவனத்துக்கு முழு உரிமையாளராக ஆகி விடுகிறது.  இந்த பங்குகளை வாங்கிய பின் தங்களை பங்குச் சந்தையில் இருந்து நீக்க வோல்கன் விண்ணப்பம் அளிக்க வேண்டும்.  அவ்வாறு அளிக்கப்பட்டால் 20 நாட்களில் லண்டன் பங்கு வர்த்தகச் சந்தை அந்த விண்ணப்பத்தை அங்கீகரிக்கும்.