முழுக்கொள்ளவை எட்டியது வீராணம் ஏரி! விவசாயிகள் மகிழ்ச்சி

சென்னை:

டப்பாண்டியல்,தமிழகம்முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரியான கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரி முழுகொள்ளளவை எட்டி  கடல்போல காட்சியளிக்கிறது. இதனால், அந்த பகுதி விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரம் அடைந்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் பரவலாக மழை பொழிந்து வருகிறது. கடலூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், பொதுமக்களின் அன்றாடை வாழ்க்கை அடியோடு முடங்கி உள்ளது.

மழையின் காரணமாக அந்த பகுதிகளில் உள்ள சுமார் 40 குளம் குட்டைகள் நிரம்பி உள்ள நிலையில், சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமான வீராணம் ஏரியும் தனது முழு கொள்ளவை எட்டி உள்ளது. ஏற்கனவே காவிரியில் இருந்து ஓரளவு தண்ணீர் வந்து, ஏரியில் கணிசமான அளவுக்கு தண்ணீர் இருந்த நிலையில், தற்போதைய மழையால் ஏரி நிரம்பி உள்ளது.

வீராணம் ஏரி 16 கி.மீ நீளமும், 6 கி.மீ அகலமும் 48 கி.மீ சுற்றளவு கொண்டதாக உள்ளது. இந்த ஏரி காட்டுமன்னார் கோவில் அருகே உள்ளது. வீராணம் ஏரியை நம்பி,  கடலூர் மாவட்டத்தில் காவிரி டெல்டா பகுதியான சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்ட பகுதிகளைச் சார்ந்த விவசாயிகள் வாழ்ந்து வருகின்றன்ர. சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.  அத்துடன் சென்னைக்கு குடிநீரும் வழங்கி வருகிறது.

இந்த நிலையில், வீராணம் ஏரி,  தனது முழு கொள்ளளவான 47.5 அடியை எட்டி கடல்போல் காட்சியளிக்கிறது. இதையடுத்து ஏரியின் பாதுகாப்பு கருதி விஎன்எஸ் மற்றும் வெள்ளியங்கால் ஒடை வழியாக 2,500 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

இதனால், வீராணம் ஏரியை சுற்றியுள்ள கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் முகாம்களில் தங்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

இதே போன்று, கெடிலம் ஆறு, தென்பெண்ணையாறு, பரவனாறு, கொள்ளிடம் மற்றும் மணிமுத்தாறு, வெள்ளாறு ஆகிய ஆறுகளும் முழுமையாக நிரம்பியுள்ளன. இதன் காரணமாக, சர்வ ராம்பேட்டை, வீரநத்தம், கண்டமங்கலம் கிராமங்களில் உள்ள 500-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளநீர் புகுந்துள்ளது.