டில்லி:

வீரப்பன் கொல்லப்பட்ட பின்னரும் பல்வேறு காரணங்களால் தென்னிந்தியாவில் யானைகள் கொல்லப்படுகிறது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

விபத்து மற்றும் பல்வேறு காரணங்களால் விலங்குகள் பலியாவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் யானைகள் வழித்தடத்தை பராமரிக்க வேண்டும். இது தொடர்பாக மத்திய அரசு 10 நாட்களுக்குள் செயல்படுத்தக் கூடிய தீர்வை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ரெயில்களில் அடிபட்டு யானைகள் இறப்பதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள் மதன் பி லோகூர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இதை தடுக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டிய அவசியம் கிடையாது என்று குறிப்பிட்டனர்.

வீரப்பன் பெரும்பாலான யானைகளை கொன்றுவிட்டான். தற்போது அவனும் உயிருடன் இல்லை. அதனால் யானைகள் எண்ணிக்கை அதிகரித்திருக்க வேண்டும். ஆனால், இதர காரணங்களால் யானைகள் கொல்லப்படுகிறது. இதற்கு தீர்வு காண வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

யானைகள் வழித்தடம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணையின் போது நீதிபதிகள் இத்தகைய கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.