சென்னை:
கோயம்பேடு மூடப்பட்டதைத் தொடர்ந்து, திருமழிசையில் அமைக்கப்பட்டு வரும் தற்காலிக சந்தை வரும் 10ந்தேதி (நாளை மறுதினம்) முதல் செயல்படும் என்று கோயம்பேடு வியாரிகள் சங்க தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வணிகம் செய்த வணிகர்கள், பணி புரிந்தவர்கள் மற்றும் அங்கு வந்து சென்ற பலருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கோயம்பேடு மார்க்கெட் சீல் வைக்கப்பட்டது. அதற்கு பதிலாக  பூந்தமல்லியை அடுத்த திருமழிசையில் உள்ள துணைக்கோள் நகரத்தில் தற்காலிக காய்கறி மொத்த விற்பனை அங்காடி செயல்படும் என சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் அறிவித்தது. அங்கு தற்காலிக சந்தை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், செய்தியாளர்களிடம் கூறிய கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள்,  ‘பொதுமக்களின் நலன் கருதி அரசின் வேண்டுகோளை ஏற்று திருமழிசையில் காய்கறி விற்பனையை தொடங்கவுள்ளோம். இதற்காக நேற்று திருமழிசைக்குச் சென்று, அங்கு அமைக்கப்பட்டு வரும் சந்தையைப் பார்வையிட்டோம்.  அப்போது சந்தையில் கூடுதலாக மேற்கொள்ளப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து சிஎம்டிஏ அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளோம் என்றனர்.
மேலும், கூலித் தொழிலாளர்கள் இல்லாமல் சந்தையைச் செயல்படுத்த முடியாது. அதனால் தற்போது சொந்த ஊருக்கு சென்றுள்ள தொழிலாளர்களை திருமழிசைக்கு அழைத்து வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
திருமழிசையில், தற்போது அமைத்துள்ள 194 கடைகளுக்கு அருகில் கொத்தமல்லி, கருவேப்பிலை, எலுமிச்சை, கீரை போன்றவற்றை விற்பனை செய்ய தனியாக இடம் ஒதுக்கித் தர வேண்டும் என்ற கோரிக்கையை அதிகாரிகளிடம் முன்வைத்துள்ளதாக கூறியவர்கள்,  திருமழிசையில் தினமும் இரவு 10 மணி முதல் அடுத்த நாள் காலை 10 மணி வரை சந்தை செயல்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனால்,  இரவு நேரத்தில் காய்கறிகளை கடைகளில் இறக்கி வைக்கும் பணிகள் நடைபெறும். எனவே காலை 4 மணி முதல் காலை 10 மணி வரை பொதுமக்கள் நேரடியாக சந்தைக்கு வந்து, காய்கறிகளை வாங்கிச் செல்லலாம்.
தற்போது கோயம்பேடு சந்தை மூடப்பட்டுள்ளதால், காய்கறிகள் வரத்து இல்லை. இதனால் விலை உயர்ந்துள்ளது. ஆகவே  இன்னும் 2 நாளில் காய்கறி விலை குறைந்து விடும் என்றவர்கள்,  அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு தருவோம்.
இவ்வாறு அவர் கூறினர்.