காய்கறி மார்க்கெட்டுகள் மூடப்படவில்லை – வதந்திகளை நம்ப வேண்டாம் : சென்னை மாநகராட்சி

சென்னை

சென்னையில் காய்கறி மார்க்கெட்டுகள் வரும் 31 வரை மூடப்படும் என்னும் வதந்தியை நம்ப வேண்டாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை விட அது குறித்த வதந்திகள் வேகமாகப் பரவி வருவதை நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம்.   கோழியால் கொரோனா வைரஸ் பரவுவதாக வந்த வதந்திகளை அடுத்து கோழியின் விலை சரிந்து வடநாட்டில் கோழிகளை இலவசமாக அளித்து வரும் வீடியோக்கள் வைரலாகி வருகிறது.

வதந்தி செய்தி

சைவ உணவு உண்போரையும் இந்த வதந்தி விட்டு வைக்கவில்லை.  இன்று சமூக வலை தளங்களில் ஒரு செய்தி பரவி வருகிறது.   அந்த செய்தியில்

“சென்னை மாநகராட்சி அனைத்து காய்கறி மற்றும் பழ மார்க்கெட்டுகளை (கோயம்பேடு, மைலாப்பூர், மாம்பலம், கிண்டி) மற்றும் நகரிலும் மாநிலத்திலும் உள்ள அனைத்து மார்க்கெட்டுகளும் இன்று நள்ளிரவு முதல் மார்ச் 31 வரை மூட உத்தரவிட்டுள்ளது”

எனக் காணப்பட்டது.

இந்த செய்தி பலரையும் குறிப்பாகப் பெண்களை கடும் அச்சத்தில் ஆழ்த்தியது.

ஆனால் அவ்வாறு உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை எனவும் இது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் மாநகராட்சி தெளிவு படுத்தியுள்ளது.

மேலும் இது போன்ற பொய்யான தகவல்களைப் பரப்புவோருக்குத் தண்டனை அளிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.