கொரோனா ஊரடங்கு, பொருளாதார சரிவு எதிரொலி: தமிழகத்தில் 38.43% குறைந்த வாகன பதிவு

சென்னை: தமிழகத்தில் ஜூலை மாதம் வாகன பதிவு 38.43% குறைந்துள்ளது.

2019ம் ஆண்டில் இதே காலகட்டத்தில் கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 79,591 ஆக இருந்த வாகனப் பதிவு 38.43% குறைந்து 1,10,581 என்று உள்ளதாக ஆட்டோமொபைல் டீலர்ஸ் அசோசியேஷன் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 26.92% வாகனப்பதிவு குறைந்து காணப்பட்டது. அந்த மாதத்துடன் ஒப்பிடும் போது இந்த வீழ்ச்சி மிக அதிகமாகும்.

ஜூலை மாதத்தில் பல மாவட்டங்களில் முழுமையான ஊரடங்கு அமலில் இருந்ததே இதற்கு காரணமாகும். ஆனால் டிராக்டர் பதிவு அதிகமாகவே காணப்பட்டது. ஜூலை மாதத்தில் 59.32% அதிகரித்துள்ளது, கடந்த ஆண்டு இதே மாதத்தில் 1,807 இலிருந்து 2,879 யூனிட்டுகள் அதிகரித்துள்ளன. முன்னதாக, இந்த விகிதம் மே மாதத்தில் 82.33% குறைந்துள்ளது.

இருசக்கர வாகன பதிவை ஒப்பிடுகையில், கடந்த ஆண்டு இதே காலத்தில் 1,49,073 ஆக இருந்த ஜூலை மாதத்தில் 35.67% குறைந்து 95,902 ஆக இருந்தது. ஜூன் மாதத்தில் காணப்பட்ட 21.73% வீழ்ச்சியை விட இந்த வீழ்ச்சி மிக அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலையில், பயணிகள் வாகன பதிவு 46.88% குறைந்து 9,001 ஆக இருந்தது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் இது 16,945 ஆக இருந்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டால் ஜூன் மாதத்தில் அவை 42.68% குறைந்துள்ளன. 3 சக்கர வண்டிகள் மற்றும் வணிக வாகன பதிவுகளும் தொடர்ந்து சரிவை கண்டுள்ளன.

3 சக்கர வண்டி பதிவு 86.74% குறைந்து 521 யூனிட்களாக பதிவாகி உள்ளது. கடந்த ஆண்டு இது 3,929 ஆகும்.  வர்த்தக வாகன பதிவு கடந்த ஆண்டு 7,837 ஆக இருந்த ஜூலை மாதத்தில், 70.93% குறைந்து 2,278 ஆக இருந்தது. இது ஜூன் மாதத்தில் 79.84% வீழ்ச்சி என்ற நிலையில் இருந்து சற்று மீண்டுள்ளது.