வாரத்துக்கு ஒரு நாள் மட்டுமே வாகனங்களுக்கு அனுமதி… தருமபுரி காவல்துறை நடவடிக்கை…

தருமபுரி:

ருமபுரி மாவட்டத்தில், இனி வாரத்துக்கு ஒருமுறை மட்டுமே, வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று காவல்துறை அறிவித்து உள்ளது.  ஊரடங்கை மீறி தேவையின்றி பலர் வெளியில் சுற்றுவதை தவிர்க்கும் வகையில், இந்த  புதிய கட்டுப்பாட்டை ஏற்படுத்தி உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால், பலர் ஊரடங்கை மீறி ஊர்சுற்றி வருகின்றனர். அவர்களுக்கு பலமுறை காவல்துறை எச்சரிக்கை விடுத்தும், திருந்தாத நிலையில், தருமபுரி காவல்துறை ஒரு புதிய முயற்சியை கொண்டு வந்துள்ளது.

அதன்படி, வாரத்தின் ஏழு நாள்களுக்கும் ஒவ்வொரு வண்ணம் வாகனங்களில் பூசப்படும் என்றும், அதன்மூலம் வாரத்தில் ஒருநாள் மட்டுமே அவர்கள் அத்தியாவசியத் தேவைகளுக்காக வீட்டை விட்டு வெளியே வர முடியும் (உதாரணமாக திங்கள்கிழமை தனது வாகனத்துடன் வெளியில் வந்த நபர் மீண்டும் அடுத்த திங்கள்கிழமைதான் வெளியில் வரமுடியும்) வகையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.

இதனால் ஊரடங்கை மீறி தேவையின்றி பலர் வாகனங்களுடன் வெளியே சுற்றித் திரிவது கட்டுப்படுத்தப்படும் என காவல்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மேலும், தங்களின்  நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும், மீறினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப்பதியப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.