வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் : சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பு

சென்னை:

வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செய்தது செல்லும் என சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

பணப்பட்டுவாடா தொடர்பாக  வேலூர் மக்களவை தொகுதி தேர்தலை தேர்தல் ஆணையம்  ரத்து செய்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம், அதிமுக ஆதரவு வேட்பாளர்  ஏ.சி.சண்முகத்தின் கோரிக்கையை நிராகரித்தது. அதைத் தொடர்ந்து பரபரப்பாக விவாதங்கள் நடைபெற்ற நிலையில், பிற்பகல் தீர்ப்பு வழங்கப்படும் என கூறியது.

வேலூர் மக்களவை தொகுதியில் திமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் வீட்டில் கடந்த மாதம் 30-ம் தேதி வருமான வரித்துறையினர், தேர்தல் அதிகாரிகள்,  சோதனை நடத்தினர். இதில், கணக்கில் வராத 10 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. மேலும் திமுக நிர்வாகிகள் வீட்டிலும் ஏராளமான பணம் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக வருமான வரித்துறை கொடுத்த அறிக்கையை தொடர்ந்து தேர்தல் ஆணையம் வேலூர் தொகுதிக்கான தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டது.

இதை எதிர்த்து  சென்னை உயர் நீதிமன்றத்தில், வேலூர் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பாக போட்டியிடும் ஏசி சண்முகம், மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை இன்று காலை உயர் நீதிமன்றம் விசாரித்தது.

அப்போது, ஏசி சண்முகம் தரப்பு வழக்கறிஞர்,  தவறிழைக்கும் வேட்பாளர் மற்றும் கட்சி மீதுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் ரத்து காரணமாக மக்களின் வரிப்பணம் வீணாகிறது” என வாதிட்டார்.  தேர்தல் ஆணையம் தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டது. வாதங்கள் முடிந்த நிலையில், தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் மாலை 5.30 மணிக்கு ஒத்தி வைத்தனர்.

அதைத்தொடர்ந்து இன்று மாலை சென்னை உயர்நீதி மன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. அப்போது,  வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செய்தது  செல்லும்  என  தீர்ப்பளித்தது.

அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்  ஏ.சி. சண்முகம் உள்பட வழக்கு தொடர்ந்து சுயேச்சைகள் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.