மூன்றாகப் பிரியும் வேலூர் மாவட்டம் : முதல்வர் அறிவிப்பு

சென்னை

வேலூர் மாவட்டத்தை மூன்றாகப் பிரிக்க உள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேசியக் கொடியை ஏற்றினார். கொடியேற்று விழாவில்  அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர். கொடியை ஏற்றி வைத்த  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதன் பிறகு அமைச்சர்கள் உள்ளிட்டோருடன் இணைந்து தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தினார்.

எடப்பாடி பழனிச்சாமி தனது உரையில், “அனைவருக்கும் 73-வது தின சுதந்திர தின வாழ்த்துக்கள். போற்றுதலுக்கும், மரியாதைக்கும் உரிய சுதந்திரத்தைப் பெற்றுத்தந்த போராட்டத் தலைவர்களை நினைவில் கொள்ளவேண்டிய நாள் இன்று. தமிழக மக்களின் ஆதரவுடன் மூன்றாவது முறையாகக் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றியதில் பெருமிதம் அடைகிறேன்.

நம் தாய் மண்ணைக் காக்க இன்னுயிர் நீத்தோரின் தியாகத்தைப் போற்றும் வகையில் மரியாதை செலுத்த வேண்டும்.

வேலூர் மாவட்டம்  மூன்றாகப் பிரிக்கப்பட உள்ளது. வேலூரைத் தலைமையிடமாகக் கொண்டு ஒரு மாவட்டம், ராணிப்பேட்டையைத் தலைமையிடமாகக் கொண்டு ஒரு மாவட்டம் மற்றும் கே வி குப்பத்தைத் தலைமையிடமாகக் கொண்டு மூன்றாவது மாவட்டம் என மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட உள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.