சென்னை:

வேலூர் மக்களவை தொகுதி தேர்தலை  ரத்து செய்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம்,  வழக்கு தொடர்ந்து ஏ.சி.சண்முகத்தின் கோரிக்கையை நிராகரித்தது, தேர்தல் ரத்து செய்தது செல்லும் என்று கூறிய நீதிமன்றம்  தேர்தல் ஆணையத்தின் அறிவிக்கைக்கு தடை விதிக்க முடியாது என்று தெரிவித்து உள்ளது.

வேலூர் மக்களவை தொகுதியில் அதிக அளவில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட காரணத்தால் அந்த தொகுதியின் தேர்தலை ரத்து செய்தது தேர்தல் ஆணையம். இதை எதிர்த்து, அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் ஏ.சி. சண்முகம் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

வேலூர் மக்களவை தொகுதியில் திமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்தும், அதிமுக கூட்டணி சார்பில் ஏ.சி.சண்முகமும் போட்டியிடுகின்றனர். அங்கு கடந்த மாதம் 30-ம் தேதி வருமான வரித்துறையினர், தேர்தல் அதிகாரிகள்,  துரைமுருகன் வீடு மற்றும் அலுவலகங்கள், கல்லூரிகளில் அதிரடி சோதனை நடத்தினார். இதில்,  கணக்கில் வராத 10 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. இதனை கைச்செலவிற்காக வைத்திருந்த பணம் என துரைமுருகன் விளக்கம் அளித்தார்.

அதைத்தொடர்ந்து,  துரைமுருகனின் நெருங்கிய ஆதரவாளர்களாக கருதப்பட்ட பூஞ்சோலை சீனிவாசன் மற்றும் சிலரது வீடுகள், நிறுவனங்களில் நடைபெற்ற சோதனையில்,வாக்காளர்கள் பெயர் பட்டியலுடன் கட்டுக்கட்டாக வைக்கப்பட்டிருந்த 11 கோடியே 54 லட்சம் ரூபாய் சிக்கியது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து விசாரணை மேற்கொண்ட வருமான வரித்துறையினர், பணத்திற்கான ஆதாரம் வழங்கப்படாத நிலையில் தேர்தலை ரத்து செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரைத்திருந்தது. அதைத் தொடர்ந்து ஜனாதிபதி வேலூர் பாராளுமன்ற தொகுதியின் தேர்தலை ரத்து செய்தார்.

இந்த நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுக்கு திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், தமது வீட்டில் சோதனை செய்து எடுக்கப்பட்ட பணத்துக்கு உரிய கணக்குகள் காண்பிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ள கதிர் ஆனந்த், அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை வெற்றிப பெற வைப்பதற்காக வருமான வரித்துறை இந்த நடவடிக்கையை எடுத்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் வருமான வரித்துறை அளித்த தவறான அறிக்கையின் அடிப்படையில், தேர்தலை ரத்து செய்திருப்பது சட்டத்துக்கு விரோதமானது என தெரிவித்துள்ள கதிர் ஆனந்த், திட்டமிட்டபடி வேலூரில் மக்களவைத் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் வேலூர் மக்களவை தொகுதியில் தேர்தல் நடத்தக் கோரி அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு நீதிபதி மணிக்குமார் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது. அப்போது ஏ.சி.சண்முகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நாளை வாக்குப்பதிவு நடக்க உள்ள நிலையில் நேற்றிரவு திடீரென தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிப்பதாகவும்,  தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதால் மக்களின் வரிப்பணம் வீணாகி உள்ளது என்று எடுத்துரைத்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தேர்தலை ரத்து செய்ய கூடாது என்றால் பணப்பட்டுவாடா செய்பவர்களை போட்டியிட அனுமதிக்க வேண்டுமா?” என கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த ஏசி சண்முகம் தரப்பு வழக்கறிஞர்,  பணப்பட்டுவாடாவில் ஈடுபட்ட வேட்பாளரை தகுதி நீக்கம் தான் செய்ய சொல்கிறோம், தவறிழைக்கும் வேட்பாளர் மற்றும் கட்சி மீதுதான் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.

விசாரணையின்போது தேர்தல் ஆணையம் தரப்பு வழக்கறிஞர்,  தேர்தல் நேர்மையாக நடக்காது என்பதற்கான போதுமான ஆதாரங்கள் இருந்ததால்தான் வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.  கணக்கில் வராத பணம் மட்டும் கைப்பற்றப்படுவது என்பது வேறு; அந்த பணத்துடன் வார்டு வாரியான வாக்காளர் விவரங்கள் கொண்ட ஆவணங்களும் கைப்பற்றப்படுவது என்பது வேறு மேலும்,  வருமான வரித்துறை அறிக்கையில் ஏற்கனவே பணப்பட்டுவாடா நடந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளதன் அடிப்படையிலேயே வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

வேலூர் தொகுதி தேர்தல் ரத்து குறித்து தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்தது என்றும்,  நாட்டின் தலைவர் என்ற முறையில் குடியரசு தலைவருக்கு அந்த முடிவு பரிந்துரைக்கப்பட்டது என்றும் தெரிவித்தார்.

அதையடுத்து,  மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், தேர்ந்தெடுக்கப்பட்டவரை தான் தகுதி நீக்க வகை செய்கிறது, வேட்பாளரை எப்படி தகுதி நீக்க முடியும்?  என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஏ.சி.சண்முகத்தின் கோரிக்கையை நிராகரித்தது, தேர்தல் ஆணையத்தின் தேர்தல் ரத்து உத்தரவு செல்லும்  என்று கூறி உள்ளது.

இந்த வழக்கில் விரிவான தீர்ப்பு   மாலை 6 மணிக்கு வழங்குவதாக நீதிபதிகள் தெரிவித்து உள்ளனர்.