ஆம்பூர்:

வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் வரும் 5ந்தேதி நடைபெற உள்ள நிலையில், அங்கு உச்சக்கட்ட பிரசாரம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஆம்பூரில் அரசு அனுமதி பெறாமல் திருமண மண்டபத்தில் கூட்டம் நடத்திய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.

வேலூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் தீவிர பிரசாரம் நடைபெற்று வருகிறது. அதிமுக, திமுகவின் உள்பட நாம் தமிழர் கட்சியினரும் பம்பரமாக சுழன்று பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கதிர் அனந்த்துக்கு ஆதரவாக முதல் கட்ட பிரசாரத்தை முடித்துவிட்டு, தற்போது 2வது கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

நேற்று வேலூர் மக்களவைத்தொகுதிக்கு உட்பட்ட ஆம்பூரில் உள்ள  திருமண மண்டபம் ஒன்றில் வேட்பாளர் கதிர் ஆனந்துடன் ஸ்டாலினும் கலந்துகொண்டு  ஆலோசனைக்கூட்டம் நடத்தினார். இதில் வேலூரில் உள்ள முஸ்லீம் இயக்கத் தலைவர்கள் பலர்  ஸ்டாலினுக்கு நேரில் ஆதரவு தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தேர்தல் பார்வையாளர்கள், அனுமதி பெறாமல் த கூட்டத்தை நடத்தியதாக, அந்த மண்டபத்தை மூடி சீல் வைத்தனர்.  மேலும், கூட்டத்தை நடத்திய தி.மு.க. தலைவர் ஸ்டாலின், மற்றும் வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் ஆகியோர் மீது ஆம்பூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.