வேலூர் தொகுதி மக்களவை தேர்தல் ரத்து : குடியரசு தலைவர் உத்தரவு

டில்லி

வேலூர் தொகுதியின் மக்களவை தேர்தலை ரத்து செய்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

வேலூர் மக்களவை தொகுதியில் திமுக பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் போட்டி இடுகிறார். அவரை எதிர்த்து புதிய நீதிக் கட்சியின் ஏ சி சண்முகம், மற்றும் அமமுக, நாம் தமிழர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

துரைமுருகன் வீட்டில் நடந்த வருமான வரி சோதனையில் பல ஆவணங்களும் ஏராளமான ரொக்கப் பணமும் பிடிபட்டதாக தகவல்கள் வெளியாகின. துரைமுருகனின் உதவியாளர், நண்பர், மற்றும் உறவினர் வீடுகளில் ஏராளமான பணம் பிடிபட்டதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவித்தன.

வருமான வரித்துறையினர் தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றத்துக்கும் இது குறித்து தகவல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தொகுதியில் ஏராளமான பணப்புழக்கம் உள்ளதால் தேர்தலை ரத்து செய்ய குடியரசு தலைவருக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்ததாக கூறப்பட்டது.

குடியரசு தலைவர் வேலூர் மக்களவை தொகுதியின் தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.