வேலூர் பாராளுமன்ற தேர்தல்: எடப்பாடி பழனிச்சாமி இன்றுமுதல் 3 நாள் பிரசாரம்

வேலூர்:

வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு ஆகஸ்டு 5ந்தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு அரசியல் கட்சித் தலைவர்கள் முகாமிட்டு வருகின்றனர். திமுக வேட்பாளரை ஆதரித்து, திமுக தலைவர் இன்று அதிகாலை முதலே வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், அதிமுக கூட்டணிக் கட்சி வேட்பாளரை ஆதரித்து, தமிழக முதல்வர்எடப்பாடி பழனிச்சாமியும் இன்று முதல் 3 நாட்கள் தேர்தல் பிரசாரத்தில் குதிக்கிறார்.

திமுகவின் பணப்பட்டுவாடா காரணமாக, நிறுத்திவைக்கப்பட்ட வேலூர் மக்களவை தொகுதிக்கு வரும் ஆகஸ்டு மாதம்  5-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி அங்கு தேர்தல் பணிகள் சுறுசுறுப்படைந்து உள்ளன. வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் மற்றும் பெயர் பொருத்தும் பணி உள்ளிட்டவை தீவிரமடைந்துள்ளன.

இந்த நிலையில், வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரமும் களைகட்டிஉள்ளது. அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவாக,  தமிழக முதலமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, இன்று பிரசாரம் மேற்கொள்கிறார்.

இதுகுறித்து அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து 27, 28ம் தேதி மற்றும் 2.8.2019 ஆகிய தேதிகளில், வேலூர் நாடாளு மன்ற தொகுதிக்கு உட்பட்ட வாணியம்பாடி, ஆம்பூர், கீழ்வைத்தியணான்குப்பம், குடியாத்தம், அணைக்கட்டு, வேலூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு பிரசாரம் செய்கிறார்.

அதன்படி இன்று மாலை 5 மணி வாணியம்பாடி, ஆம்பூரிலும், 28ம் தேதி (ஞாயிறு) மாலை 5 மணி கீழ்வைத்தியணான்குப்பம், குடியாத்தம் ஆகிய பகுதிகளிலும், ஆகஸ்ட் 2ம் தேதி (வெள்ளி) மாலை அணைக்கட்டு, வேலூர் ஆகிய பகுதிகளிலும் பிரசாரம் செய்கிறார் என கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து  மு.க.ஸ்டாலின் இன்று அதிகாலையிலேயே நடைபயணம் செய்யும்போதே, தனது தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்ட நிலையில்,  இன்று மாலை 4 மணியளவில் கே.விகுப்பம் பகுதியில் வாக்கு சேகரிக்கிறார்.

இதன் காரணமாக வேலூர்  தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.