போராட்டத்திற்கு வரத் தயாரா? ரஜினிக்கு வேல்முருகன் சவால்!

திருவாரூர்: முஸ்லீம்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் முதல் ஆளாக வந்து நிற்பேன் என்று கூறிய ரஜினி, வண்ணாரப்பேட்டைக்கு வருவாரா? என்று கேள்வியெழுப்பியுள்ளார் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன்.

ரஜினிகாந்த் பாட்ஷாவாக நடித்தால் மட்டும் போதுமா? முதல் ஆளாக வந்து நிற்க வேண்டாமா? என்றும் அவர் கேட்டுள்ளார்.

திருவாரூரில் நடைபெற்ற சிஏஏ எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட வேல்முருகன் இவ்வாறு பேசினார். அவர் மேலும் பேசியதாவது, “புதுவை முதல்வர் நாராயணசாமி சட்டசபையில் பேசுகையில், இந்த அரசின் முதல்வராக நான் இருக்கும்வரை சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் ஆகியவற்றை அமல்படுத்த மாட்டேன் என அறிவித்துள்ளார்.

அதுபோல் தமிழக முதல்வரும் அறிவிக்க வேண்டும். அவ்வாறு அறிவிக்காவிட்டால் ஜனநாயக வழியிலான இந்தப் போராட்டம் தொடரும். ரஜினிகாந்த் பாட்ஷாவாக நடித்தால் மட்டும் போதாது. இஸ்லாமியர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் முதல் ஆளாக வந்து நிற்பேன் என கூறிய ரஜினிகாந்த் இப்போது என்ன செய்யப்போகிறார்.

உண்மையிலேயே நீங்கள் இஸ்லாமிய மக்களை மதித்தால், இது மதசார்பற்ற நாடாக நீடிக்க வேண்டும் என நினைத்தால் வண்ணாரப்பேட்டைக்கு வாருங்கள். இந்தப் போராட்டத்திற்கு தமிழக வாழ்வுரிமை கட்சி முழு ஆதரவு கொடுக்கும். எங்களை சிறையில் அடைத்தாலும் கவலைப்பட மாட்டோம்” என்று ஆவேசமாகப் பேசினார்.