வேல்முருகனின் காவிரிப் போராட்டம் சேப்பாக்கத்துக்கு மாற்றப்பட்டது

சென்னை

மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததால் வேல் முருகன் தனது போராட்டத்தை சேப்பாக்கத்துக்கு மாற்றி உள்ளார்.

சென்னை மெரினா கடற்கரையில் விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு,  தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட பல தலைவர்கள் போராட்டம் நடத்த அனுமதி கோரி இருந்தனர்.   நேற்று விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணுவுக்கு நீதிமன்றம் மெரினாவில் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி வழங்கியது,  அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு மேல் முறையீடு செய்ததால் அந்த அனுமதிக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

தமிழக அரசு போராட்டங்களை மெரினாவில் நடத்தக்கூடாது எனவும், வள்ளுவர் கோட்டம், சேப்பாக்கம் மற்றும் காயிதே மில்லத் மணிமண்டபம் ஆயி இடங்களில் காவல்துறையினரிடம் முன் அனுமதி பெற்று நடத்திக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது.   அதை சுட்டிக்காட்டிய நீதிமன்றம் இந்த 3 இடங்களில் போராட்டம் நடத்த மனு செய்தால் அதை காவல்துறை பரிசீலிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், “காவிரி விவகாரத்திற்காக சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்தை எண்ணி இருந்தோம்.   நீதிமன்றம் மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதிக்க மறுத்துள்ளது.  அதனால் எங்கள் கட்சியின் போராட்டம் சேப்பாக்கத்துக்கு மார்றப்பட்டுள்ளது”  என தெரிவித்துள்ளார்.