ரூ.12 கோடி செலவில் சென்னையில் 3 ஏரிகள் சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்றம்! தமிழகஅரசு உத்தரவு 

சென்னை:

மிழகத்தில் தண்ணீர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும் நிலத்தடி நீரை சேமிக்கும் வகையிலும்,ஏரிகளை சுத்தப்படுத்தி, பாதுகாத்து,  சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி, சென்னைக்கு அருகே உள்ள வேங்கைவாசல், பெரும்பாக்கம் மற்றும்ஆதம்பாக்கம் ஏரிகளை சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.12 கோடி ஒதுக்கி உள்ளது.

ஏற்கனவே  காஞ்சீபுரம் மாவட்டத்தில் பீர்க்கங்கரணை ஏறி உள்பட சில ஏரிகள்  சுற்றுச்சூழல் ஏரியாக மாற்றப்பட்ட நிலையில், தற்போது சென்னையிலும் ஏரிகளை சுற்றுச்சூழல் பூங்காக்களாக மாற்றும் முயற்சி தொடங்கப்பட உள்ளது.

கிழக்கு தாம்பரத்தை அடுத்து உள்ள வேங்கைவாசல் பகுதியில் உள்ள  பெரியேரியை சுற்றுச்சூழல் ஏரியாக மாற்ற திட்டமிடப்பட்டு உள்ளது. ஏற்கனவே கடந்தஆண்டு இந்த ஏரியை தன்னார்வலர்கள் சுத்தப்படுத்தி ஆக்கிரமிப்புகளை அகற்றப்பட்ட நிலையில், தற்போது, அரசு முயற்சிகளை முன்னெடுத்து உள்ளது.

அதுபோல, பெரும்பாக்கம் மற்றும் ஆதம்பாக்கம் ஏரிகளையும்  சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்றும்  பணியை சுற்றுச்சூழல் மறுசீரமைப்பை நீர்வளத் துறை மேற்கொள்ளும் என்றும் இதற்காக ரூ.12கோடி ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும், இந்த பணிகள் மார்ச் 12ந்தேதிக்குள் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அந்த பகுதியைச் சேர்ந்த குடியிருப்பாளர் சங்க நிர்வாகிகள்,  சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு நிதியத்தின் கீழ் இதற்கான நிதி ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும், கடந்த ஆண்டு சென்னையில் நிலவிய நீர் பற்றாக்குறையை கவனத்தில் கொண்டு, ஏற்கனவே வேங்கைவாசல் ஏரியில், குடியிருப்பாளர்   ரீசார்ஜ் கிணறு (மழைநீர் சேகரிப்பு கிணறு) கட்டியதாக வெங்கைவாசல் குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர். தற்போது அந்த கிணறு ஏறக்குறைய  3-4 லட்சம் லிட்டர் தண்ணீரை தொடர்ந்து வழங்கி வருகிறது.

தற்போது அரசு ஒதுக்கியுள்ள நிதி மற்றும் சுற்றுச்சூழல் பூங்கா  திட்டத்தை வரவேற்பதாகவும், இதனால், ஏரியின் சேமிப்பு திறனை மேம்படுத்துவதோடு பொழுதுபோக்கு இடமாகவும் செயல்படும் என்று கூறினார்.

மேலும்,  இந்த திட்டம் நிலத்தடி நீர் அட்டவணையை ரீசார்ஜ் செய்வதற்கும், வட்டாரத்தில் நீர் பற்றாக்குறையை குறைப்பதற்கும் உதவும். “மாதம்பாக்கம் போன்ற பகுதிகளிலிருந்து சிட்டேரிக்கு நுழைவு வாய்க்கால்கள் மூலம் கழிவுநீர் வெளியேற்றப்படுவதைத் தடுக்கவும் அரசு துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறத்தியதுடன்,  முன்னதாக அதிகாரிகள் உறுதி அளித்தபடி ஒரு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட வேண்டும்,”என்றும் தெரிவித்தனர்.

560 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பெரும்பாக்கம் ஏரி ஏற்கனவே சென்னை மெட்ரோவாட்டரால் குடிநீர் ஆதாரமாக உருவாக்கப்பட்டு வருகிறது. இது திட்டத்தின் மூலம் 4.8 கோடி செலவில் அழகுபடுத்தப்படும்.அதுபோல மற்ற ஏரிகளும் சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இந்த திட்டத்தின்படி, ஏரிகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் இடித்து அகற்றப்படும். மேலும், ஏரியில்  நீர் உள்வரத்து கால்வாய்கள் அமைக்கப்படுவதுடன், ஏரியை தூர்வாரி ஆழப்படுத்தி மழைநீரை சேமிக்கவும், கரைகளை பலப்படுத்தி மழைக்காலங்களில் ஏரியின் நீர் வரத்துக்கு ஏற்பவும், கரைகள் உடைந்து பாதிப்பு ஏற்படாத வகையிலும் உபரிநீரை சீரான முறையில் வெளியேற்றும் வகையில் மதகுகளும் அமைக்கப்படும்.

அத்துடன்  ஏரியை சுற்றிலும் தடுப்பு சுவர் அமைத்து, பூங்காவாக மாற்றி,  ஏரிக்கரைகளில் பொதுமக்கள் நடைபயிற்சி செய்ய நடைபயிற்சி தளமும் அமைக்கப்பட உள்ளது.