கொரோனா வைரஸால் இத்தாலி பாதிப்பு : வெனிஸ் நகர விளையாட்டு போட்டிகள் ரத்து
வெனிஸ்
கொரோனா வைரஸ் தொற்றால் இத்தாலி நாடு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் வெனிஸ் நகரில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் தாக்குதல் சீனாவை மட்டுமின்றி பல உலக நாடுகளையும் பாதித்து வருகிறது. சீனாவில் நேற்று கொரோனா வைரஸால் 97 பேர் மரணமடைந்ததால் மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 2500 ஐ தாண்டி உள்ளது. அத்துடன் சுமார் 77000 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதைப் போல் இத்தாலி, தென் கொரியா உள்ளிட்ட பலநாடுகளில் கொரோனா வைரஸ் தக்குதல் அதிகமாகி உள்ளது. இத்தாலி நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதலில் மூவர் மரணம் அடைந்துள்ளதாகவும் சுமார் 79 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரப் பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இது அதிகமாக இருக்கலாம் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்ப்டுத்தபப்ட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளனர். மரணமடைந்த இருவர் லம்பார்டி மற்றும் வெனிடோ மாகாணத்தை சேர்ந்தவர்கள். இந்த வைரஸ் தாக்குதல் அச்சம் காரணமாகப் பலரும் இத்தாலி நாட்டுக்கு வருவதை நிறுத்தி உள்ளனர். நாட்டில் பல கல்வி நிலையங்கள், கடைகள் மற்றும் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன.
இத்தாலி நாட்டின் வெனிஸ் நகரில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வந்தன. கொரோனா வைரஸ் தாக்குதல் அச்சம் காரணமாக அந்த போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. வெனிடோ மற்றும் லம்பார்டி மாகாணத்தில் நுழையவும் அங்கிருந்து வெளியேறவும் மக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளன.
வெனிஸில் இருந்து ஆஸ்திரியா செல்லும் ரெயிலில் இருவருக்கு ஜுர அறிகுறிகள் இருந்தால் அந்த ரெயில் ஆஸ்திரியா எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளது. அதன் பிறகு அந்த இருவரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் இருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பில்லை என்பது தெரிய வந்துள்ளது.