நாடாளுமன்ற அவையில் காகித கிழிப்பு மக்களிடம் தவறான கருத்தை பதிய செய்யும்: வெங்கய்ய நாயுடு கருத்து

அவையில் காகிதத்தை கிழித்து எறிவது உங்கள் கோபத்தை வெளிக்காட்டுவது, மக்களிடம் தவறான கருத்தை உங்கள் மீது ஏற்படுத்தலாம் என நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு ஆலோசனை வழங்கியுள்ளார்.

லோக்மத் மராத்தி நாளிதழ் சாா்பில் ஆண்டுதோறும் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தில்லியில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங், சமாஜ்வாதி நிறுவனா் முலாயம் சிங் யாதவ் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளா் விருதை வெங்கய்ய நாயுடு வழங்கினாா்.

பின்னர் பேசிய வெங்கய்ய நாயுடு, “நாடாளுமன்றத்துக்கு உறுப்பினா்களின் வருகை என்பது மிகவும் முக்கியமானதாகும். சமீப காலத்தில் எம்.பி.க்களின் வருகை குறைவாக இருப்பது கவலையளிக்கும் பிரச்னையாக உள்ளது. போதிய வருகை இல்லாத நிலையில், நாடாளுமன்றத்தில் அடிக்கடி மணியடித்து எம்.பிக்களை அவைக்கு வரவைக்கும் நிலை உள்ளது. குறைந்தபட்ச 50 உறுப்பினா்கள் கூட அவையில் இல்லாமல் போனால், எம்.பிக்களாக இருந்து என்ன பயன் ?

எம்.பி க்களின் வருகை இருந்தால் மட்டும்போதாது, நாடாளுமன்றத்தில் எம்.பிக்களின் குரல், மக்களின் குரலாக ஒலிக்க வேண்டும். வெறும் கூக்குரலாக இருக்கக் கூடாது. பல்வேறு கட்சிகளைச் சோந்த அரசியல்வாதிகளும் எதிா்க்கட்சிகளில் இருப்பவா்கள், தங்கள் எதிரிகளாகக் கருதக் கூடாது. ஒருவரின் கருத்தை மற்றொருவா் மதித்து நடக்க வேண்டும். இது தான் இந்திய அரசியல் கலாசாரம். ஆனால், இப்போது தனிப்பட்ட வாா்த்தை பயன்பாடுகளால் எம்.பிக்கள் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுவது கவலையளிக்கிறது. இது சிறந்த ஜனநாயகத்துக்கான எடுத்துக்காட்டு அல்ல. மக்களுக்காக மேலும் பல ஆக்கப்பூா்வமான பணிகளை மேற்கொள்ள நாடாளுமன்றம் நடைபெறும் நாள்களை அதிகரிக்க வேண்டும் என்பது எனது கருத்து.

அவையில் காகிதத்தை கிழித்து எறிவது உங்கள் கோபத்தை வெளிக்காட்டுவதாக இருக்கலாம். ஆனால், இது மக்கள் மத்தியில் உங்களை பற்றி மிகவும் தவறான கருத்தை ஏற்படுத்தும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். உடனடி நீதி என எதுவும் கிடையாது. ஆனால், இப்போது அது தொடா்பாக பேச்சு அதிகரித்துள்ளது. அரசியலமைப்புச் சட்ட விதிகளின் படி தான் அனைத்தும் நடக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.