டில்லி

நாட்டு மக்கள் அனைவரும் அவரவர் தாய் மொழியில் பேசுங்கள் என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.

மறைந்த பாடகி எம் எஸ் சுப்புலட்சுமிக்கு 101ஆவது பிறந்த நாள் கொண்டாட்ட விழ்ஹா சமீபத்தில் நடந்தது.  இந்த விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்துக் கொண்டு உரையாற்றினார்.

அந்த உரையில் அவர் கூறியதாவது :

”நான் எப்பொழுதுமே மக்கள் தங்கள் தாய், தாய்நாடு, தாய் மொழி மற்றும் தங்கள் சொந்த ஊரை என்றுமே மறக்கக் கூடாது என சொல்லி வருவேன்.  அப்படி மறப்பவர்கள் மனிதர்களே அல்ல என்பது எனது கருத்து.   நம் கருவிலிருந்தே கேட்டு வருவது நம் தாய்மொழிதான்.  அதை நாம் மதிக்க வேண்டும். நாம் அதனால் தாய்மொழியில் உரையாடுவது மிகவும் நல்லதாகும்.  ஆங்கிலம் மட்டுமே தெரிந்தவர்களிடம் ஆங்கிலத்தில் உரையாடுவது அவசியம் என புரிந்துக் கொண்ட நாம் நமது தாய்மொழி தெரிந்தவர்களிடம் எதற்கு பிற மொழியில் பேச வேண்டும் என நான் கேட்கிறேன்.

அம்மா – அப்பா என்னும் வார்த்தைகள் இதயத்தில் இருந்து வருவது.  மம்மி-டாடி அப்படி இல்லை.  உருது பேசுபவர்கள் அம்மி-வாப்பா என அழைப்பார்கள்.  ஒலியில் மாறுபட்டாலும் அனைத்தும் தாய் மொழிகள் தான்.  உங்கள் தாய்மொழி இந்தி, சமஸ்கிருதம், உருது, தெலுங்கு, தமிழ் என எதுவாக இருந்தாலும் உங்கள் மொழி தெரிந்தவர்களிடம் தயங்காமல் தாய்மொழியில் உரையாடுங்கள்.

மறைந்த எம் எஸ் சுப்புலட்சுமி இந்திய இசைக்கு ஆற்றிய தொண்டுகள் ஏராளம்.  அவரை மக்கள் சுருக்கமாம எம் எஸ் அன அழைப்பார்கள்.  அவரது பாடல்கள் இளைஞர்களுக்கும் போய் சேர வேண்டும்.  அவருடைய பாடல்கள் பல இந்து தர்மம் எனப்படும் சனாதன தர்மத்தின் ஆணிவேர் ஆகும்.  அவரது பாடல்களை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்” என வெங்கையா ரெட்டி கூறினார்.

நாயுடு துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கும் முன்னர் மோடி அரசில் அமைச்சராக பணி புரிந்தவர்.  அந்த கால கட்டத்தில் அவர் ”தாய் மொழியுடன் தேசிய மொழியான இந்தியை அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும்.   நாட்டில் பெரும்பான்மையானவர்கள் பேசும் மொழி இந்தி மொழி ஆகும்.  ஆங்கிலத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை மக்கள் இந்திக்கும், தங்கள் தாய்மொழிக்கும் அளிக்க வேண்டும்” என கூறி வந்தது குறிப்பிடத்தக்கது.