விதி எண் 370 ஐ அம்பேத்கர்  எதிர்த்தாரா? :வெங்கையா நாயுடுவின் தவறான தகவல்

ப்ல்லி

விதி எண் 370 ஐ அம்பேத்கர் எதிர்த்ததாகத் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தவறான தகவல் அளித்துள்ளார்.

ஆர் எஸ் எஸ் மற்றும் பாஜகவினர் வெகுநாட்களாக விதி எண் 370 ஐ ரத்து செய்து  காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யவேண்டும் எனப் பல வருடங்களாகக் கூறி வருகின்றனர். ஏற்கனவே இரு முறை பாஜக ஆட்சி செய்த போதிலும் இரு அவைகளிலும் பெரும்பான்மை இல்லாத காரணத்தால் பாஜகவால் அதை நிறைவேற்ற முடியவில்லை. தற்போது தனது பெரும்பான்மையின் மூலம் பாஜக அதை நிறைவேற்றி உள்ளது. இதற்கு நாடெங்கும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்புக் குரல் எழுப்பி வருகின்றன.

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இது குறித்து ஒரு நாளிதழில் வெளியான  தகவலின்படி, “அம்பேத்கர் விதி எண் 370 ஐ எதிர்த்துள்ளார். அவர் மறைந்த காஷ்மீர் அரசியல் தலைவரான ஷேக் அப்துல்லாவுக்கு எழுதிய கடிதத்தில் ‘அன்புள்ள அப்துல்லா, நீங்கள் காஷ்மீர் மாநிலத்தை இந்தியா பாதுகாக்க வேண்டும் என விரும்புகிறீர்கள். உங்கள் பகுதியில் சாலை அமைத்து அந்தப் பகுதி மக்களுக்கு உணவு தானியங்கள் அளித்து அந்த பகுதி மக்களுக்குச் சம அந்தஸ்து வழங்க வேண்டும் எனக் கூறுகிறீர்கள்.

ஆனால் இந்தியக் குடிமகனுக்கோ அல்லது இந்தியாவுக்கோ காஷ்மீர் மீது எவ்வித உரிமையும் இல்லை என விரும்பி வருகிறீர்கள். இந்திய அரசுக்கு மிகக் குறைந்த  அதிகாரமே உண்டு எனவும் கூறி வருகிறீர்கள். இந்தியாவுக்கு எதிரான விவகாரங்களில் உங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகிறீர்கள். ஒரு சட்ட அமைச்சராக நான் அதை விரும்பவில்லை. நான் எனது நாட்டுக்கு எவ்வித துரோகமும் செய்ய  மாட்டேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு அம்பேத்கர் தனது எதிர்ப்பை நேரடியாகத் தெரிவித்துள்ளார்” என அறிவித்திருந்தார்.

இதற்கு ஆதாரமாக வெங்கையா நாயுடு 2016 ஆம் வருடம் எஸ் என் புசி என்பவரால் எழுதப்பட்ட ”டாக்டர் பி ஆர் அம்பேத்கர் : ஃப்ரேமிங் ஆஃப் இந்தியன் கான்ஸ்டிட்யூஷன்” என்னும் புத்தகத்தை மேற்கோள் காட்டி உள்ளார். ஆனால் அந்த புத்தகத்தில் உள்ளவை ஒரு ஆர் எஸ் எஸ் தலைவர் குறிப்பிட்டதாகும். இந்த புத்தகத்தை எழுதிய புசி ஓய்வு பெற்ற இந்திய வருமானத்துறை அதிகாரி ஆவார். தற்போது ஐதராபாத்தில் வசித்து வரும் அவர் இந்த தகவலை ஊடகங்களில் உறுதி செய்துள்ளார்..

புசி தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள வரிகள் ஆர் எஸ் எஸ்முக்கிய தலைவர்களில் ஒருவரான பால்ராஜ் மதோக் கூறியவை என்பதை ஒப்புக் கொண்டுள்ளார். மேலும் புசி, “இந்த தகவல்களை நான் எச் ஆர் போன்சா என்னும் பொறியாளர் எழுதிய புத்தகத்தில் இருந்து எடுத்தேன். அந்த புத்தகம் 2013 ஆம் வருடம் பிப்ரவரி மாதம்  வெளியிடப்பட்டுள்ளது. இந்த வரிகளை பால்ராஜ் மதோக் எழுதிய கட்டுரையில் இருந்து மேற்கோள் காட்டியதாக போன்ஸே தெரிவித்துள்ளார்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் துணை ஜனாதிபதி மத்திய அரசுக்கு ஆதரவாக இவ்வாறு தவறான தகவல்கள் அளித்தது மக்களிடையே சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.

நன்றி: தி ஒயர்