சென்னை:
மெட்ரோ ரெயில் விரிவாக்க பணிகளுக்கான திட்டத்துக்கு முதல்வர் ஜெயலலிதா இன்று அடிக்கல் நாட்டினார்.
ரூ.3,770 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ள வண்ணாரப்பேட்டை – விம்கோ நகர் இடையேயான மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டத்தால் வடசென்னை மக்கள் பெரிதும் பயனடைவர் என்றார்.
Metro-rail-project-plans-for-expansion-Chief-Minister_SECVPF
விழாவில் பேசிய தமிழக முதல்வர் ஜெயலலிதா:  “சென்னை மெட்ரோ ரயில்  வழித் தடத்தை, வண்ணாரப்பேட்டையிலிருந்து திருவொற்றியூர்- விம்கோ நகர் வரை நீட்டிக்கும் திட்டத்திற்கு இன்று அடிக்கல் நாட்டி, பணிகளை துவக்கி வைத்ததில் பெருமகிழ்ச்சி.
இந்த விரிவாக்கப் பணி 3 ஆண்டுகளில் முடிக்கப்படும் அதன் மூலம் வடசென்னை மக்கள் பெரிதும் பயன் பெறுவர்.  இந்த வழித் தடத்தில், 8 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்படும். இதில், சர் தியாகராயா கல்லூரி, கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை, மற்றும் டோல்கேட் மெட்ரோ நிலையங்கள் எனது சட்டமன்றத் தொகுதியான ராதாகிருஷ்ணன் நகர் பகுதியில் அமைக்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்த  விரிவாக்கக வழித் தடத் திட்டத்திற்கு மத்திய அரசின் ஒப்புதலை பெற்றுத் தருவதில் முக்கியப் பங்காற்றியவர் .வெங்கையா நாயுடு. எனவே தான், இந்த திட்ட துவக்க விழாவில் அவர் கலந்து கொள்ள வேண்டும் என்று நான் உறுதியாக இருந்தேன்.
தமிழ்நாட்டின் உற்ற நண்பர் வெங்கையா நாயுடு ஆவார். தமிழக நலன்களை காப்பதிலும் தமிழக அரசின் திட்டங்களுக்கு மத்திய அரசின் அனுமதியை விரைந்து பெற்றுத் தருவதிலும் முன் நிற்பவர் வெங்கையா நாயுடு  என்று சொன்னால் அது மிகையல்ல.
வெங்கையா நாயுடுவின் முயற்சியும் பிரதமர் நரேந்திர மோடியின் ஒத்துழைப்புமே இன்று இந்தத் திட்டம் துவக்கப்பட காரணம் என பிரதமர் மோடியையும், மத்திய அமைச்சரையும் புகழ்ந்து பேசினார்.
மேலும் 2003ம் ஆண்டு அப்போதைய அதிமுக அரசால் மேற்கொள்ளப்பட்டு, அந்த ஆய்வின் அடிப்படையில் தான் வண்ணாரப்பேட்டை முதல் சென்னை விமான நிலையம் வரையிலான 23 கிலோ மீட்டர் தூர வழித் தடம் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையம் முதல் பரங்கிமலை வரையிலான 22 கிலோ மீட்டர் தூர வழித் தடம் என இரு வழித் தடங்கள் தெரிந்தெடுக்கப்பட்டன.
இந்த நடவடிக்கையின் மூலம் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அப்போதைய அதிமுக அரசு வித்திட்டது.
14,600 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டத்திற்கு 2007-ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் மாநில அரசும், 2009-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மத்திய அரசும் ஒப்புதல் வழங்கியது.
இத்திட்டத்திற்காக, 2006-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு மே மாதம் வரை அப்போதைய தி.மு.க. ஆட்சியில் 1,143 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டது.
2011-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கடந்த ஜூன் மாதம் வரை 11,596 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கு தேவையான நிதியை ஒவ்வொரு ஆண்டும் முழுமையாக ஒதுக்கி, திட்டப் பணிகள், குறித்த காலத்தில் முடிவுறத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அதிமுக அரசு எடுத்து வருகிறது.
இத்திட்டத்திற்காக இதுவரை தமிழக அரசு 2,383 கோடி ரூபாயை பங்கு மூலதனமாகவும், 1,854 கோடி ரூபாயைச் சார்நிலைக் கடனாகவும், 82.51 கோடி ரூபாயை மானியமாகவும் வழங்கியுள்ளது. மத்திய அரசு 1,950 கோடி ரூபாயைப் பங்கு மூலதனமாகவும், 365 கோடி ரூபாயைச் சார்நிலைக் கடனாகவும் வழங்கியுள்ளது. ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையின் மூலம் 7,095 கோடி ரூபாய் கடன் பெறப்பட்டுள்ளது.
2011-ஆம் ஆண்டு வரையிலான அப்போதைய தி.மு.க ஆட்சியில் சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகளில் 3 சதவீதமே முடிவடைந்திருந்தது. அதிமுக அரசு 2011-ஆம் ஆண்டு மே மாதம் பொறுப்பேற்ற பின்னர் பணிகளை விரைந்து செயல்படுத்தியதன் காரணமாக உயர்த்தப்பட்ட வழித் தடங்கள் மற்றும் மெட்ரோ நிலையங்களை பொறுத்தவரை 98 சதவீதப் பணிகளும், நிலத்தடி வழித் தடங்கள் மற்றும் மெட்ரோ நிலையங்களை பொறுத்த வரையில் 65 சதவீதப் பணிகளும், பணிமனையை பொறுத்த வரையில் 100 சதவீதப் பணிகளும் தற்போது முடிவுற்றுள்ளன.
கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் சேவை 29.6.2015 முதல் வழங்கப்படுகிறது. உயர்த்தப்பட்ட வழித் தடப் பகுதியான சின்னமலை முதல் விமான நிலையம் வரை அடுத்த மாதத்திலும், ஆலந்தூர் முதல் புனித தோமையர் மலை வரை வரும் அக்டோபர் மாதத்திலும், நிலத்தடி வழித் தடத்தில் ஒரு பகுதியான கோயம்பேடு முதல் நேரு பூங்கா வரை இந்த ஆண்டு இறுதிக்குள்ளும், பயணிகள் சேவை, துவக்கப்பட்டு விடும். மீதமுள்ள பகுதிகளில் அனைத்துப் பணிகளும் 2017-ஆம் ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்பட்டு விடும்.
வடசென்னைப் பகுதியில் பெருகி வரும், போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, அப்பகுதி மக்களும் மெட்ரோ ரயில் சேவையை பெற்றிடும் வகையில், மெட்ரோ ரயில் திட்டத்தின் வழித் தடத்தை வண்ணாரப்பேட்டையிலிருந்து திருவொற்றியூர் – விம்கோ நகர் வரையிலான 9 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீட்டிப்பதற்கான கருத்துரு 2010-ஆம் ஆண்டு, மத்திய அரசுக்கு அப்போதைய தி.மு.க அரசால் அனுப்பி வைக்கப்பட்டது. எனினும், முந்தைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு, இதற்கான ஒப்புதலை வழங்கவே இல்லை. நான் ஏற்கெனவே தெரிவித்தபடி, எனது அரசு மேற்கொண்ட முயற்சியின் காரணமாகவும், வெங்கையா நாயுடுவின் ஒத்துழைப்பின் காரணமாகவும், தற்போது மத்திய அரசு இத்திட்டத்திற்கு ஒப்புதலை வழங்கியுள்ளது.
தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் 45.1 கிலோ மீட்டர் நீளத்திற்கான, மெட்ரோ வழித் தடங்கள் எதிர்காலத் தேவைக்கு போதாது என்பதால் எனது தலைமையிலான அரசு, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்டத்தில் மூன்று வழித் தடங்களைச் செயல்படுத்த முடிவெடுத்துள்ளது. இவ்வழித்தடங்களில், இரண்டு வழித் தடங்கள் வடசென்னை பகுதியான மாதவரத்திலிருந்து, செயல்படுத்தும் வகையில் தற்போது விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகின்றது.
இத்திட்டங்களுக்கு நிதியுதவி பெறுவதற்காக ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையின் 2016-ஆம் ஆண்டுக்கான சுழல் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.  இத்திட்டம் மத்திய அரசின் ஒப்புதலுக்கு விரைவில் அனுப்பப்படும். மத்திய அரசு அதற்கான ஒப்புதலை விரைந்து வழங்க வேண்டும் என இத்தருணத்தில் வெங்கையா நாயுடுவைக், கேட்டுக் கொள்கிறேன்.
2011-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அப்போதைய தி.மு.க ஆட்சியின் போது மத்திய அரசு, மாநில அரசு மற்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கிடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதில் பல ஷரத்துகள் மாநில அரசின் நலன்களுக்கு எதிராக இருப்பதால் இவை மாற்றி அமைக்கப்பட வேண்டும் என நான் பாரதப் பிரதமரை கேட்டுக் கொண்டுள்ளேன்.
14.6.2016 அன்று பிரதமரிடம் நான் அளித்த கோரிக்கை மனுவில் இது பற்றி விரிவாகத் தெரிவித்துள்ளேன். மாநில அரசு பாதிக்காத வகையில் இந்த ஒப்பந்தத்தை மாற்றி அமைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென, மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.