கொரோனாவிலிருந்து குணமடைந்தார் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு..!

டெல்லி: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளார்.

நாடு முழுவதும் முதலமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோரையும் கொரோனா தாக்கி வருகிறது. அந்த வகையில் குடியரசு  துணை தலைவர்  வெங்கையா நாயுடுவுக்கும் செப்டம்பர் 29ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார். அவரது உடல்நிலையை எய்ம்ஸ் மருத்துவ குழு கண்காணித்து வந்தது. இந் நிலையில் வெங்கையா நாயுடு கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்ததாக குடியரசு துணை தலைவர் செயலகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து குடியரசு துணை தலைவர் செயலகம் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: எய்ம்ஸ் மருத்துவ குழு, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு இன்று கொரோனா பரிசோதனை நடத்தியது.அதில் அவருக்கு கொரோனா இல்லை என்பது உறுதியானது. அவர் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளார். விரைவில், வழக்கமான பணிகளை துவங்குவார் என்று கூறப்பட்டுள்ளது.