டெல்லி: ஆபாச வீடியோக்களால் சிறு குழந்தைகள் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் கமிட்டி ஒன்றை அமைக்கலாம் என்று மாநிலங்களவை தலைவர் வெங்கய்யா நாயுடு யோசனை தெரிவித்து இருக்கிறார்.

மாநிலங்களவையில் அதிமுக எம்பியான சத்யானந்த் பேசும் போது,  இணைய தளங்களில் வெளியாகும் ஆபாச வீடியோக்களால் சிறு குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். அவர்களை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அதற்கு பதிலளித்து வெங்கய்யா நாயுடு பேசியதாவது: சிறந்த நிர்வாகிகளான ஜெய்ராம் ரமேஷ், பாஜகவின் வினய் சகஸ்ரபுத்தே, திரிணமுல் காங்கிரசின் சுகென்து சேகர் ராய், திருச்சி சிவா உள்ளிட்டோர் இருக்கின்றனர்.

அவர்களுடன் மற்ற எம்பிக்களும் இணைந்து ஆபாச படங்களால் சிறு குழந்தைகள் பாதிக்கப்படுவதை தடுப்பது பற்றி சிந்திக்க வேண்டும். இது மிகவும் சீரியசான விவகாரம்.

எனவே, சிறந்த, திடமான ஆலோசனைகளை எடுக்க வேண்டும்.ஆகையால், தகவல் தொடர்புதுறை மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் உரிய ஆலோசனை செய்ய வேண்டும்.

அனைத்து எம்பிக்களும் இதற்கு முயற்சிக்க வேண்டும். அதற்கு ஜெய்ராம் ரமேஷ் துவக்கமாக இருந்து அனைத்து எம்பிக்களையும் ஒருங்கிணைக்க வேண்டும். இது ஒரு அதிகாரப்பூர்வ கமிட்டியாக இல்லாமல், நலன்களை கருதும் குழுவாக இருத்தல் வேண்டும் என்றார்.