விவசாயிகளை ஏமாற்றும் விஷப்பாம்புதான் முதல்வர் எடப்பாடி! காஞ்சி போராட்டத்தில் ஸ்டாலின் ஆவேசம்…

காஞ்சிபுரம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேளாண் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டு பேசும்போது, விவசாயி என கூறிக்கொள்ளும் முதல்வர் எடப்பாடி விவசாயிகளை ஏமாற்றும் விஷப்பாம்பு என காட்டமாக விமர்சித்தார்.

விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்றுவதாக கூறி, மோடி தலைமையிலான மத்திய அரசு 3 வேளாண் மசோதாக்களை கொண்டு வநதுள்ளது. இந்த மசோதாக்களுக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். திமுக உள்பட எதிர்க்கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்து,  வேளாண் திட்டங்களை திரும்பப் பெறக்கோரி போராட்டத்தில் குதித்துள்ளது.

திமுக ஏற்கனவே அனைத்துக்கட்சி கூட்டத்தில் அறிவித்தபடி, இன்று தமிழகம் முழுவதும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம்  நடத்தி வருகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள சென்ற  ஸ்டாலின், முன்னதாக, அப்பகுதியில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த பெண்களை சந்தித்து  பேசினார்.

முதல்வர் எடப்பாடியைப் போல, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கழுத்தில் பச்சைத்துண்டு அணிந்து, களத்திற்குள் இறங்கி,  விவசாயிகளை சந்தித்து பேசியது, திமுகவினரிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

தொடர்ந்து,  காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் சார்பில் காஞ்சிபுரம் அடுத்த கீழம்பி களத்துமேடு  பகுதியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.  அவர் பேசியதாவது,

ஏழை தாயின் மகன் என்று கூறிக்கொள்ளும் பிரதமர் ஏராளமான இந்தியர்களை ஏழைகளாக்கி கொண்டிருக்கிறார். தான் விவசாயி என்று கூறிக்கொள்ளும் எடப்பாடி ஆட்சியில்தான் விவசாயிகள் உரிமைகள் பறிபோகின்றன. விவசாயிகளுக்கு விரோதமான செயல்களை பிரதமரும் முதல்வரும் போட்டிப்போட்டுக்கொண்டு செய்கின்றனர்.

விவசாயிகளை ஏமாற்றி வரும் விஷப்பாம்புதான் எடப்பாடி பழனிசாமி என்றும், குடிமராமத்து திட்டத்தைக் காட்டி பணத்தை கொள்ளை அடிக்கும் எடப்பாடி விவசாயியா?, கிசான் திட்டத்தில் பணத்தை கொள்ளையடித்த எடப்பாடி பழனிசாமி விவசாயியா என்றும் கேள்வி எழுப்பினார். விவசாயக்கடன்களை ரத்து செய்யக்கூறிய உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்ற பழனிசாமி விவசாயியா? என்று கேள்வி எழுப்பினார்.

வேளாண் சட்டங்களை  பாஜக கூட்டணி கட்சியே எதிர்க்கிறது. வேளாண் சட்டங்களை ஏற்க மறுத்து பாஜக அரசில் இருந்து அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் பதவி விலகி உள்ளார். விவசாயிகள் நலனை பாதிக்கும் என்பதால் பஞ்சாபில் கூட்டணியில் இருந்து  சிரோமணி அகாலிதளம் விலகியுள்ளது. பஞ்சாபில், மேற்குவங்கத்தில் என இந்தியா முழுவதும் வேளாண் சட்டத்திற்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெறுகின்றன. வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடுபவர்களை கைது செய்ய  மாட்டோம் என்று பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது. மக்களுக்கு எதிரான சட்டங்களை துணிச்சலாக திமுக எதிர்க்கும் என்று கூறியவர், மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்தை திமுக மட்டும் எதிர்க்கவில்லை, அகாலிதளம், ஆம்ஆத்மி உள்ளிட்ட பல்வேறு  கட்சிகளும் எதிர்க்கின்றனர்.