இந்தியாவில் நடைபெறவிருந்த டென்னிஸ் போட்டிகள் தாய்லாந்திற்கு மாற்றம்

புதுடெல்லி: பாகிஸ்தானின் வான்வழி மூடப்பட்டிருப்பதால், இந்தியாவில் நடைபெறவிருந்த ஜுனியர் டேவிஸ் கப் மற்றும் ஃபெட் கப் டென்னிஸ் போட்டிகள், தாய்லாந்திற்கு மாற்றப்பட்டு விட்டன.

இதுகுறித்து கூறப்படுவதாவது; 16 வயதுக்குட்பட்டோருக்கான டேவிஸ் கப் மற்றும் ஃபெட் கப் டென்னிஸ் போட்டிகள், ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் நடத்தப்பட திட்டமிடப்பட்டிருந்தன.

இந்தப் போட்டிகளை, உலகக்கோப்பை டென்னிஸ் போட்டி போன்றது எனக் கூறுவார்கள்.

ஜுனியர் டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டிகள் ஏப்ரல் 8 – 13ம் தேதி வரையிலும், ஜுனியர் ஃபெட் கப் டென்னிஸ் போட்டிகள் ஏப்ரல் 15 – 20ம் தேதி வரையிலும் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், தற்போது பாகிஸ்தானின் வான்வழி மூடப்பட்டிருப்பதாலும், இந்திய விமான நிலையங்களில் உட்சபட்ச முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நிலவுவதாலும், வெளிநாட்டு போட்டியாளர்கள் இந்தியா வந்து சேர்வதில் பல சிக்கல்கள் எழுகின்றன.

அதிகநேரம் செலவழித்து, சுற்றுப்பாதையில் அவர்கள் வந்துசேர வேண்டியுள்ளதால், போட்டிகள் அனைத்தும் தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகருக்கு மாற்றப்பட்டுவிட்டன.

நிலைமை சீரானதும், எதிர்காலத்தில், இந்தியாவில் போட்டிகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

– மதுரை மாயாண்டி