டில்லி

பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் முக்கிய குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள உன்னாவ் பலாத்கார வழக்கின் தீர்ப்பை டில்லி உயர்நீதிமன்றம் வரும் 16 ஆம் தேதி வழங்க உள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தின், உன்னாவ் மாவட்டத்தில், இளம் பெண் ஒருவர் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் குல்தீப் சிங் சேன்காரால், கடத்தப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார் எனக் குற்றச்சாட்டு எழுந்தது.. அந்த பெண் அப்போது  மைனர்,  அதாவது 18 வயது நிரம்பாத பெண்ணாக இருந்தார்.  இந்த சம்பவம் குறித்து அந்த பெண் தனது குடும்பத்தார் உதவியோடு காவல்துறையிடம் புகார் அளித்தார்

அந்தப் பெண்ணின் கடும்  போராட்டத்துக்குப் பிறகு வழக்குப் பதியப்பட்டு இந்த வழக்கு டில்லி நீதிமன்றத்தில் நடைபெற்று அதன் பிறகு சிபிஐக்கு மாற்றப்பட்டது.  இந்த மாதம் 2ம் தேதி, இந்த வழக்கில், சிபிஐ தரப்பு தனது நிறைவு வாதத்தை முன் வைத்தது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

இன்று டில்லி மாவட்ட நீதிபதியான, தர்மேஷ் ஷர்மா, வெளியிட்டுள்ள தகவலில், டிசம்பர் 16ம் தேதி தீர்ப்பு வழங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த வருடம் ஜூலை மாதம், பாதிக்கப்பட்ட பெண் பயணித்த கார் விபத்தில் சிக்கியது. அந்த காரில் ஒரு லாரி மோதியதில், அதிர்ஷ்டவசமாக இளம் பெண் தப்பிய போதும், அந்த பெண்ணின் இரு உறவுக்கார பெண்கள் பரிதாபமாகப் பலியாகினர்.

இந்த விபத்தின் பின்னணியில் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் இருப்பதாக, அப்பெண்ணின் குடும்பத்தார் குற்றம் சாட்டி உள்ளனர்.  இதனால், இந்த வழக்கின் தீர்ப்பு மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.