டில்லி

ர்நாடகா மாநில சட்டப்பேரவை அதிருப்தி உறுப்பினர்கள் வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் மஜத கட்சியினர் கூட்டணி ஆட்சி நடத்தி வருகின்றனர். காங்கிரஸ் மற்றும் மஜத கட்சியை சேர்ந்த 16 உறுப்பினர்கள் சமீபத்தில் ராஜினாமா செய்துளனர். அவர்களது ராஜ்னாமா குறித்து கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் முடிவு எடுக்காமல் இருந்தார்.

மும்பையில் உள்ள ஒரு விடுதியில் தங்கி இருந்த அதிருப்தி உறுப்பினர்கள் 10 பேர் உச்சநீதிமன்றத்தில் இது குறித்து மனு அளித்தனர். அதன் பிறகு மீதமுள்ள 6 பேரும் மனு அளித்தனர். தங்களது ராஜினாமா கடிதம் குறித்து விரைவில் முடிவு எடுக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உறுப்பினர்கள் சபாநாயகரை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் சபாநாயகர் இது குறித்து விரைவில் முடிவு எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமார் தம்மால் உடனடியாக முடிவு எடுக்க முடியாது என அறிவித்தார்.

இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் அதிருப்தி உறுப்பினர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோகத்கி, “கர்நாடக சபாநாயகர் வேண்டுமென்றே முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். அவரை உடனடியாக முடிவு எடுக்க நீதிமன்றம் உத்தாரவிட வேண்டும்” என கோரிக்கை விடுத்தார்.

இதற்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், “நான் அரசியல் சட்டப்படி நடந்துக் கொள்கிறேன். என்னால் சபாநாயகரை முடிவு எடுக்கச் சொல்லி நிர்பந்திக்க முடியாது. இரு தரப்புக்கும் பாதகம் இல்லாத வகையில் உத்தரவு விரைவில் பிறப்பிக்கபடும்” என தெரிவித்தார்.

மேலும் இந்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.