கடுங்குளிர் – கொட்டும் மழையிலும் 42-வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்….

டெல்லி: தலைநகர் டெல்லி எல்லையில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் இன்று 42வது நாளாக தொடர்கிறது. அங்கு கடுமையான குளிர்நிலவி வரும் நிலையில், தற்போது மழையும் பெய்து வருகிறது. இருந்தாலும், விவசாயிகள் தங்கள் உறுதியை விட்டுக்கொடுக்காமல் வேளாண் சட்டங்களுக்கு எதிராக  தொடர்ந்து போராடி வருகின்றனர்.

மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக அரியாணா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம் உள்பட வட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லி எல்லையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்தியஅரசு, விவசாய அமைப்புகளுடன் 7 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது உள்ளது. ஆனால், வேளாண் சட்டங்களை முழுமையாக திரும்பப்பெற வேண்டும் என்பதில் விவசாயிகள் உறுதியாக இருப்பதால், பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. இதையடுத்து, நாளை (8ந்தேதி) 8வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

இந்த  நிலையில், டெல்லியில் கடும் குளிருக்கு மத்தியில் கடந்த சில நாட்களாக மழையும் பெய்து வருகிறது. இதனால் தற்காலிக கூண்டு அமைத்து போராடி வரும் விவசாயிகள் பெரும் அவதியடைந்து உள்ளனர்.   அவர்களது, கூடாரங்கள் மழை காற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டு வரும் நிலையில், சாலையில் பெருகி ஓடும் மழை நீராலும் கடுமையான சவால்களை சந்தித்து வருகின்றனர்.

இதற்கிடையில், நாளை டிராக்டர் பேரணி அறிவிக்கப்பட்டுள்ளதால், அதற்கு  விவசாயிகள் தயாராகி வருவதாக தெரிவித்துள்ளனர்.