தராபாத்

பிரபல தமிழ், தெலுங்கு, கன்னட திரைப்பட இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா மரணம் அடைந்தார்.

பிரபல திரைப்பட இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா தெலுங்கு திரை உலகில் உதவி இயக்குனராக பணியை தொடங்கினார். பல படங்களில் உதவி இயக்குனராக பணி புரிந்த அவர் 1982 ஆம் வருடம் இண்டிலோ ராமையா வீதிலோ கிருஷ்ணையா என்னும் பட்த்தின் மூலம் இயக்குனரானார். அதன் பிறகு அவர் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் வெற்றிப் படங்களை இயக்கி உள்ளார்.

இவர் இதுவரை 101 படங்களை இயக்கி உள்ளார். தெலுங்கில் இருந்து மொழி மாற்றம் செய்யப்பட்டு வெற்றி அடைந்த இதுதாண்டா போலீஸ், பாரத் பந்த், அருந்ததி உள்ளிட்ட பல படங்கள் கோடி ராமகிருஷ்ணா இயக்கிய திரைப்படங்கள் ஆகும். இவருடைய சமூக அவலங்களை சுட்டிக்காட்டும் பல படங்கள் இந்தி மொழியிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெற்றி அடைந்துள்ளன. தற்போது இவருக்கு 64 வயதாகிறது.

ஐதராபாத்தில் வசித்து வரும் கோடி ராமகிருஷ்ணா கடந்த சில நாட்களாக சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார்.  நேற்று முன் தினம் இவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் இவர் குடும்பத்தினர் தனியார் மருத்தவமனையில் சேர்த்தனர்.

அங்கு இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. சென்னையில் இருந்து மருத்துவ நிபுணர்கள் சென்று சிகிச்சை அளித்தும் பலனின்றி கோடி ராமகிருஷ்ணா மரணம் அடைந்தார். அவருடைய மரணத்தால் திரை உலகம் கடும் சோகம் அடைந்துள்ளது