கொரோனா சிகிச்சை பெற்று வீடு திரும்பினார் இயக்குநர் எஸ்.பி. முத்துராமன்

சென்னை:
கொரோனா அறிகுறிகளுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் வீடு திரும்பியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் ரஜினிகாந்தை வைத்து 25 படங்களை இயக்கிய எஸ்.பி. முத்துராமனுக்கு அவரின் 86வது பிறந்தநாள் அன்று உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து சென்னையில் இருக்கும் மெட்வே மருத்துவமனையில் அனுமதித்தார்கள். அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.

பிறந்தநாள் அன்று முத்துராமன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்து அறிந்த திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் கவலை அடைந்தனர். அவருக்கு ஒன்றும் ஆகாது, விரைவில் குணமாகி வீடு திரும்புவார், நாங்கள் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறோம் என்று பலரும் சமூக வலைதளங்களில் தெரிவித்தனர்.

அவர்களின் பிரார்த்தனைக்கு பலன் கிடைத்துவிட்டது. முத்துராமன் குணமடைந்துவிட்டார்.

இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,

கொரோனா  மற்றும் நிமோனியா அறிகுறிகளுடன் கடந்த 7ம் தேதி மெட்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல இயக்குநர் மிஸ்டர் எஸ்.பி. முத்துராமன் முழுவதும் குணமடைந்துவிட்டார் என்பதை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

அவர் இன்று வீடு திரும்பினார். அவரின் நிலைமை நார்மலாக இருக்கிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனை அறிக்கையை பார்த்த நலம் விரும்பிகள் மகிழ்ச்சி அடைந்திருப்பதுடன், கடவுளுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் மீண்டும் பேயாட்டம் ஆடிக் கொண்டிருக்கிறது. இதனால் தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. தமிழகத்தில் யாரும் மாஸ்க் அணிவது இல்லையாம் என்று பிற மாநிலத்தவர்கள் வியந்து பேசி வருகின்றனர். இந்நிலையில் தான் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்று அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.