பரவை முனியம்மா இன்று அதிகாலை மரணம்

துரை

பிரபல நாட்டுப்புற பாடகியும் நடிகையுமான பரவை முனியம்மா இன்று அதிகாலை மரணம்  அடைந்தார்.

பிரபல நாட்டுப்புற பாடகியான பரவை முனியம்மா தமிழ்நாட்டில் மட்டுமின்றி பல வெளிநாடுகளிலும் தனது கச்சேரியை நிகழ்த்திப் புகழ் பெற்றுள்ளார்.   இவருக்குத் தமிழக அரசு கலைமாமணி பட்டம் வழங்கி உள்ளது.  இவர் விக்ரம் நடித்த தூள் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி சுமார் 80க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.  இறுதியாக சிவகார்த்திகேயனுடன் மான் கராத்தே என்னும் படத்தில் நடித்தார்.

கடந்த சில காலமாகப் பரவை முனியம்மா உடல்நிலை குறித்துப் பல வதந்திகள் பரவி வந்தன.  அவர் மரணம் அடைந்ததாகவும் செய்திகள் வந்தன.   அவருடைய உடல் நிலை சீர் கெட்டு சிகிச்சைக்குப் பணம் இல்லாமல் அவர் இருந்துள்ளார்.  அதனால் விஷால், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் பண உதவி செய்து உடல் நலம் தேறி பேட்டிகள் அளித்தார்.

மீண்டும் அவர் உடல் நிலை மோசமானதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அவருடைய உடல் நிலை நேற்று மிகவும் மோசமடைந்ததால் மருத்துவமனையில் இருந்து இன்று அதிகாலை 2 மணிக்கு வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.  சுமார் 3 மணிக்கு அவர் மரணம் அடைந்தார். தற்போது 83 வயதாகும் இவருக்கு 3 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர்.  இவர்களில் ஒரு மகன் மூளை வளர்ச்சி குன்றியவர் ஆவார்.

பரவை முனியம்மாவின் இறுதிச் சடங்கு இன்று மதியம் 3 மணிக்கு மதுரை அருகே உள்ள இவரது சொந்த ஊரில் நடைபெறுகிறது.  பல பிரபலங்கள் இவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  தற்போது தேசிய ஊரடங்கு அமலில் உள்ளதால் இறுதிச் சடங்கில் இவர் உறவினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக் கொள்ள முடியாத நிலை உண்டாகி இருக்கிறது.

கார்ட்டூன் கேலரி