கால்நடை மருத்துவ படிப்பு: வரும் 24-ம் தேதி கலந்தாய்வு தொடக்கம்

சென்னை:

கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் 24-ம் தேதி முதல் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை கால்நடை மருத்துவ கல்லூரியில் இந்த மாதம் (ஜூலை( 24 முதல் ஜூலை 26 வரை கலந்தாய்வு நடைபெறும் என்றும், முதல்நாளான 24ந்தேதி  சிறப்பு மற்றும் தொழிற்கல்வி பிரிவினருக்கும், ஜூலை 25 பிவிஎஸ்சி மற்றும் ஏஎச் காலனி பிரிவினருக்கும் கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் கீழ், சென்னை, நாமக்கல், ஒரத்தநாடு மற்றும் நெல்லையில், அரசு கால்நடை மருத்துவ கல்லுாரிகள் உள்ளன.

இந்தக் கல்லுாரிகளில், பி.வி.எஸ்.சி., எனப்படும், கால்நடை மருத்துவம், ஏ.ஹெச்., எனப்படும், கால்நடை பராமரிப்பு படிப்புகளுக்கு, 360 இடங்கள் உள்ளன.

மேலும், பி.டெக்., உணவு தொழில் நுட்ப பட்டப்படிப்புக்கு, 40; பி.டெக்., கோழியின தொழில்நுட்பட பட்டப்படிப்புக்கு, 40; பி.டெக்., பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு, 20 இடங்கள் உள்ளன. மொத்தமுள்ள, 460 இடங்க ளுக்கு, 2018 – 19ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

கால்நடை மருத்துவ படிப்பில், 15 சதவீத இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டிற்கும், பி.டெக்., உணவு தொழில் நுட்ப படிப்பில், 15 சதவீத இடங்கள் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக ஒதுக் கீட்டிற்கும் அளிக்கப்படும். வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு, ஒன்பது இடங்களும், வெளி நாட்டினருக்கு, ஐந்து இடங்களும், ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் இருந்து புலம் பெயர்ந்தோருக்கு, இரண்டு இடங்களும் ஒதுக்கப்படும்.

பி.டெக்., உணவு தொழில்நுட்ப பாடப்பிரிவில், வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மற்றும் வெளி நாட்டினருக்கு, தலா, இரண்டு இடங்கள் உள்ளன.

இந்த இடங்களுக்கான   தரவரிசை பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில், வரும் 24ந்தேதி கவுன்சிலிங் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.