வருகிறது வெற்றிமாறனின் ஜல்லிக்கட்டு திரைப்படம் வாடிவாசல்! இதுதான் கதை!

 

ஜல்லிக்கட்டு” வெற்றிமாறன்

சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட கதை, தற்போது “பிரச்சினையை” பேச வருகிறது என்பது ஆச்சரியம்தானே!

ஆமாம் சரியாக 58 ஆண்டுகளுக்கு முன், பிரபல எழுத்தாளர் சு. செல்லப்பா எழுதியது ஜல்லிக்கட்டினை அடிநாதமாகக் கொண்ட “வாடிவாசல்” நாவல். அதைத்தான் தற்போது பிரபல இயக்குநர் வெற்றிமாறன் திரைப்படமாக்க இருக்கிறார்.

ஜல்லிக்கட்டு – தடை – அதன் பின் உள்ள அரசியல் எல்லாமும் இதில் உண்டு.

கதை இதுதான்.

மதுரை வாடிவாசலில் வருடம் தோறும் நடக்கும் ஏறு தழுவுதல் (ஜல்லிக்கட்டு) போட்டி நடைபெறுகிறது. அதில் தன் தகப்பனை கொம்பால் முட்டிக் கொன்ற காரி என்கிற காளையை அடக்க களமிறங்கத் திட்டமிடுகிறான் பிச்சி.

“காரி’ காளை,  மற்றவை சாதாரணக் காளை அல்ல. ஜமீன்தார் வீட்டுக் காளை அது! ஜல்லிக்கட்டு விளையாட்டுக்காகவே,  கொம்பு சீவி வளர்க்கப்பட்ட காளை.

அந்த வட்டாரத்தில் ஏறு தழுவுதலில் பெரும் கெட்டிக்காரர் என்று பெயர் பெற்ற தனது அப்பாவை கொன்ற காளை என்பதால், அதை அடக்கி பழிவாங்க பிச்சி விரும்புகிறான்  என்றே பலரும் நினைக்கிறார்கள்.

ஆனால் பிச்சி அப்படி நினைக்கவில்லை.  தன் தந்தையின் இறப்பின் மீது இருக்கும் கறையை அகற்றவேண்டும் என்பது மட்டுமே அவனது எண்ணம்.

காளையைக் களத்தில் சந்திக்கிறான் பிச்சி. களத்தில் ஒருவனது செயல்பாடுகளை அவனது எதிரியின் அசைவுகள்தானே தீர்மானிக்கின்றன? பிச்சி,  காளையின் உடல் அசைவுகளை கவனமாக உள் வாங்குகிறான். காரியின் நகர்வுகளுக்கு ஏற்ப அவனது நகர்வும் அமைகிறது.

ஜமீன்தார்,  பிச்சி யாரென்பதை  அறிகிறார். அவன் நிச்சயமாக,  தனது காளை காரியை அடக்கிவிடுவான் என்பதை அவனது உடல் அசைவுகளில் இருந்து  உணர்கிறாரர் ஜமீன்தார்.

“வாடிவாசல்” புத்தகம்

அப்படி நடந்துவிட்டால், அதை அவரால் தாங்கிக்கொள்ளவே முடியாது. ’காரி’தான் அவருடைய மதிப்பு மரியாதை அதிகாரம் கவுரவம் எல்லாமே….

காரியை பிச்சி அடக்கிவிடும் சூழலில் ஜமீன்தார் எப்படி எதிர்கொள்கிறார் என்பதை முழுக்க முழுக்க ஒரு ஜல்லிக்கட்டுக் களத்தின் நிகழ்வாக விவரிக்கிறார் தி.சு. செல்லப்பா.

தமிழில் காளைகளுக்கும் மனிதனுக்குமான உறவினை விவரிக்கும் படைப்புகளில் மிக முக்கியமானது ‘கமலாம்பாள் சரித்திரம்”. அதற்கடுத்து செல்லப்பாவின் ‘வாடிவாசல்’தான் பேசப்படுகிறது.

இந்த நாவலின் முதல் பதிப்பின் முன்னுரையில்  செல்லப்பா சொல்வதைக் கேளுங்கள்:

”அந்த வாடிவாசலில் மனுஷ ரத்தம் சிந்தலாம். காளை உடலில் ஒரு சொட்டு ரத்தம் காணக்கூடாது. எதன் கை ஓங்குதோ அது தான் தூக்கும். மனுசன் இதை விளையாட்டாக நினைத்தாலும் மிருகத்துக்கு அது விளையாட்டல்ல. அதுதான் ஜல்லிக்கட்டு” ஆம்..  காரி என்கிற அந்த காளைக்கு ஜல்லிக்கட்டு என்பது விளையாட்டு கிடையாது.  அதைப் பொறுத்தவரையில் தன் எதிரில் நிற்பவனும் காளைதான்.  அவனை தனது பிம்பமாவே காணை நோக்கும்.

சி.சு. செல்லப்பா

காளை – மனிதன் என்கிற வேறுபாடுகளைக் கடந்து அதிகாரம், சாதியம் ஆகியவற்றின் மீதான எதிர்ப்புகளை ஓங்கிடச் செய்யும் களமாக வாடிவாசல் அமைகிறது என்பதை உணர்த்தியிருக்கிறார் செல்லப்பா.

, ஜமீந்தார் சாதியப் படிநிலைகளில்  மே… லே இருப்பவர். பிச்சி கீ… ழே இருப்பவன்.  பிச்சி, அந்தக் காளையை வென்றுவிட்டால் அதிகாரத்தை வென்றுவிட்டதாக ஆகிவிடுமே!

இந்தப் புத்தகத்தின் ஆறாம் பதிப்புக்காக முன்னுரை எழுதிய எழுத்தாளர் பெருமாள்முருகன் சொல்வதைக் கேளுங்ள்:

”ஜல்லிக்கட்டை மிருக வதை என்றும் காட்டுமிராண்டி விளையாட்டு என்றும் விமர்சிக்கும் ஜீவகாருண்ய அமைப்புகள். ஜல்லிக்கட்டை வெவ்வேறு தளங்களில் வைத்துப் பார்க்கும் வாடிவாசல் நாவலை ஒரு முறையேனும் வாசித்துப் பார்க்க வேண்டும்!”

இந்த நாவலைத்தான் திரைப்படமாக எடுக்க இருக்கிறார் வெற்றிமாறன்.