வெற்றிவேல் நம்பிக்கை துரோகம்: கிருஷ்ணபிரியா குற்றச்சாட்டு

சென்னை,

ஜெ.சிகிச்சை தொடர்பான வீடியோ இன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, வீடியோவை வெளியிட்டு வெற்றிவேல் நம்பிக்கை துரோகம் செய்துள்ளார் என்று குற்றம்சாட்டினார்.

கடந்த ஆண்டு அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோ, நாளை ஆர்.கே.நகர் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு டிடிவி ஆதரவாளரான வெற்றிவேல் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

சுமார்,  20 நிமிடம் ஓடும் இந்த வீடியோவில் ஜெயலலிதா நைட்டி அணிந்த நிலையில், பழச்சாறு பருகியபடி தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருக்கிறார்.

ஜெ.வின் மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்ட நிலையில், முதன் முதலாக தினகரன் தரப்பில் இருந்து இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், வீடியோ வெளியானது குறித்து, சசிகலாவின் உறவினர் இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது பேஸ்புக் பக்கத்தில்,  “தினகரன் உடனிருக்கும் வெற்றிவேலின் கீழ்த்தரமான செயல்” என பதிவிட்டுள்ள நிலையில், செய்தியாளர்களை சந்தித்தும் விளக்கம் அளித்தார்.

அப்போது, தன்மீது கொலைப்பழி வந்தபோதுகூட சசிகலா ஜெ.சிகிச்சை குறித்த வீடியோவை வெளியிடவில்லை என்று கூறிய பிரியா, ஜெயலலிதா சொன்னதால்தான் சசிகலா வீடியோ எடுத்தார் என்றும் கூறினார்.

கிச்சையின்போது ஜெ. கழுத்தை திருப்ப முடியாத நிலையில் இருந்தால், தனக்கு பின்னால் உள்ள இயந்திரங்கள் குறித்து அறிய வீடியோ எடுக்க சொன்னதாகவும், அதன்பேரிலேயே சசிகலா வீடியோ எடுத்ததாகவும் கூறினார்.

மேலும், இந்த  வீடியோவை, தேவைப்பட்டால்  விசாரணை ஆணையத்திடம் வழங்கவே சசிகலா எங்களிடம் தந்தார். அதை நாங்கள் டிடிவிடம் கொடுத்திருந்தோம் என்றும் கூறினார்.

ஆனால், டிடிவி தினகரனிடம் வழங்கப்பட்ட வீடியோ வெற்றிவேலிடம் சென்றது எப்படி. வெற்றி வேல் நம்பிக்கை துரோகம் செய்துள்ளார். இதுகுறித்து டிடிவி தினகரன் அவர்மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

இந்த வீடியோ தொடர்பாக தினகரனுக்கும், சசிகலா குடும்பதினருக்கும் இடையே மோதல் முற்றி வருவது தெரியவந்துள்ளது.