வி இ ப மற்றும் சிவசேனாவின் தனித் தனிக் கூட்டம் : அதிரும் அயோத்தி

யோத்தி

ராமர் கோவில் கட்ட அவசர சட்டம் இயற்ற வேண்டும் என சிவசேனா இன்று தனிக்கூட்டம் ஒன்றை நடத்துகிறது.

சமீபகாலமாக பாஜகவின் நெருங்கிய தோழமைக் கட்சியான சிவசேனா பாஜகவுடன் கருத்து வேற்றுமை கொண்டுள்ளது. பாஜகவை தொடர்ந்து சிவசேனா எதிர்த்து வருகின்றது. அந்த எதிர்ப்பை இந்துத்வா அமைப்பான ஆர் எஸ் எஸ் மற்றும் விஸ்வ இந்த் பரிஷத் உடனும் சிவசேனா காட்டி வருகிறது. ராமர் கோவில் அமைக்க அவசர சட்டம் இயற்றக் கோரி இன்று வி இ ப தர்மசபை கூட்டம் கூட்டுவது தெரிந்ததே.

இன்று பாபர் மசூதி இடிப்பதற்கு பொறுப்பேற்றுக் கொண்ட அமைப்பான சிவசேனா தனியாக ஒரு கூட்டம் நடத்துகிறது. இந்த கூட்டத்துக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை. அதனால் அயொத்தி வாசிகளுடன் ஒரு சந்திப்பு என சிவசேனா பெயர் மாற்றி உள்ளது. இந்த கூட்டத்தில் கலந்துக் கொள்ள நேற்று உத்தவ் தாக்கரே மற்றும் அவர் மகன் ஆதித்யா ஆகியோர் அயோத்திக்கு வந்துள்ளனர்.

நேற்று சரயு நதி ஆரத்தியில் உத்தவ் தாக்கரே கலந்துக் கொண்டார். அப்போது உத்தவ் தாக்கரே, “முன்பு மத்தியில் வாஜ்பாய் அமைத்திருந்தது கூட்டணி ஆட்சி என்பதால் ராமர் கோவில் கட்ட முடியவில்லை. ஆனால் பாஜகவுக்கு தற்பொது தனிப் பெரும்பான்மை உள்ளது. ஆகவே ராமர் கோவில் அமைக்க பாஜக அரசு உடனடியக அவசர சட்டம் இயற்ற வேண்டும் அத்துடன் கட்டுமானப் பணியின் தொடக்கத் தேதியையும் இப்போதே அறிவிக்க வேண்டும்” என பேசினார்.

இன்று வி இ ப வின் தர்மசபை கூட்டமும் நடைபெற உள்ளதால் அயோத்தி நகர் கடுமையான பாதுகாப்பில் உள்ளது. நகரில் 1 டிஐஜி, 3 மூத்த எஸ்பிகள், 10 ஏஎஸ்பிகள், 21 துணை எஸ்பிகள், 160 ஆய்வாளர்கள் மற்றும் 700 காவலர்கள் இடம்பெற்றுள்ளனர். மேலும், உ.பி. சிறப்பு படையின் 42 கம்பெனிகள், 5 மத்திய பாதுகாப்பு படைக் குழுக்கள் மற்றும் தீவிரவாத தடுப்பு படையினர் ஆகியோரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.