யோத்யா

ராமர் கோவில் விவகாரம் இன்னும் முடிவடையாமல் உச்சநீதி மன்றத்தில் இருக்கும் சமயத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் கோயில் கட்ட கற்களை கொண்டு வந்துள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற பரிஷத் கூட்டத்தில் இந்த வருட இறுதிக்குள் கோயில் கட்ட ஆரம்பிக்க வேண்டும் எனவும் இதற்கான பொருட்களை இப்போதிலிருந்தே சேமிக்க வேண்டும் எனவும் தீர்மானம் இயற்றப்பட்டது.

பரிஷத் அமைப்பின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான திரிலோக்நாத் பாண்டே, தற்போது இரு ட்ரக்குக்ளில் கற்கள் ராஜஸ்தானில் இருந்து எடுத்து வரப்பட்டதாகவும், தொடர்ந்து பல லோடுகள் வந்து இறங்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பு முந்தைய சமாஜ்வாதி கட்சி ஆட்சி நடத்தியபோது இதே போல இரண்டு லோடுகள் விற்பனை வரி அதிகாரிகளால் அனுமதிக்கப்படவில்லை.  அதற்கான படிவம் 39 பெறப்படவில்லை எனக் காரணம் கூறி அனுமதி மறுக்கப்பட்டது, பரிஷத் அமைப்பினர் பலநாட்கள் போராடி சென்ற மாதம் தான் அனுமதி பெற்றனர்.

பரிஷத் அமைப்பின் மற்றொரு தலைவர், தற்போது பாஜக கட்சி ஆட்சிப் பொறுப்பில் இருப்பதால் இனி எந்தத் தடையும் இருக்காது என தெரிவித்தார்.

இதைப் பற்றி பாப்ரி மஸ்ஜித் கமிட்டியை சேர்ந்த காலிக் அகமது கான், இந்த நிகழ்வு உயர்நீதிமன்ற வழக்கை எந்த விதத்திலும் பாதிக்காது என்றும் இது வாக்காளர்களுக்கு ஆலயம் கட்ட முயற்சி செய்வதாக ஒரு பொய்யான ஆறுதல் அளிக்கும் செயலே என கருத்து தெரிவித்துள்ளார்.   மேலும் தங்களுக்கு இந்திய அரசாண்மையின் மீதும் உச்ச நீதிமன்றத்தின் மீதும் முழு நம்பிக்கை உள்ளதால் இதைக் கண்டு அஞ்சப்போவதில்லை எனவும் கூறினார்.